
மைத்திரி போட்ட ‘பிளான் ஏ’ தோல்வி
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கும் ராஜபக்ஷக்களுக்கும் இடையே தொடர்புகள் இருக்கலாம் என்ற சந்தேகங்களுக்கு தாக்குதலுக்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள் காரணமாக இருக்கின்றது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான முதல்நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
உயிர்த் ஞாயிறு தாக்குதலின் குற்றவாளிகள் யார் என்பதனை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதுடன், இதற்கான சுயாதீன சர்வதேச விசாரணை அவசியமாகும் என்பதனையே நாங்கள் கோருகின்றோம். தேசப்பற்று, மதம், இனம் தொடர்பில் தெரிவித்து ஆட்சிக்கு வந்தவர்கள் தொடர்பிலேயே சந்தேகங்கள் உள்ளன. இந்நிலையில் செனல் 4 விவகாரத்தில் இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பிலும் சந்தேகங்கள் ஏற்படுகின்றன.
சனல் 4 விவகாரத்தில் அசாத் மௌலானா என்பவர் ரி.எம்.வி.பி. கட்சியின் உறுப்பினர். பொதுஜன முன்னணியின் கூட்டு கட்சியாகும். பிள்ளையான் அதில் இருக்கின்றார். அந்தக் கட்சியின் மாகாண சபை வேட்பாளராகவும் இருந்துள்ளார். அத்துடன் பிள்ளையான் முதலமைச்சராக இருந்த போது செயலாளராகவும் இருந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கத்தின் மீது சந்தேகங்கள் ஏற்பட இன்னும் காரணங்கள் உள்ளன. அதன்படி தான் பதவிக்கு வந்ததும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்று கூறினாலும் 3வருடங்கள் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சம்பவம் தொடர்பான விசாரணை நடத்திய அதிகாரிகளை இடமாற்றினார்.
விசாரணை அதிகாரிகளான ரவி செனவிரட்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோர் சஹரான் குழுவுக்கும் ராஜபக்ஷக்களுக்காக கடைக்கு போனவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்தினர். இதனால்தான் அவர்களுக்கு இடமாற்றம் செய்தனர். இதில் சந்தேகங்கள் ஏற்படாதா? 2018 நவம்பர் மாதத்தில் வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொல்லப்பட்டனர். சஹரான் குழுவே கொன்றது என்பதற்கான ஆதாரங்கள் இருந்த போதும் புலனாய்வு குழுவின், ராஜபக்ஷக்களுக்காக கடைக்கு போகின்றவர்கள் அதனை விடுதலைப் புலிகள் மேல் சுமத்தினர். அன்று பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ஆயுதத்தாலேயே அன்று மாவனெல்லையில் எனது செயலாளர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் சந்தேகங்கள் ஏற்படாதா?.
அன்று வனாத்தமுல்லையில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இது தொடர்பிலும் சீஐடி விசாரணைகள் திசை திருப்பப்பட்டன. இதனால் எங்களின் சந்தேகங்கள் சரியானதே. இதனால் இவற்றை செய்ய வேண்டும்.
இதேவேளை 2018 ஒக்டோபர் 26ஆம் திகதி மகிந்தவை பிரதமராக திருட்டுத் தனமாக மைத்திரிபால சிறிசேன நியமித்தார். அதுவே அவர்களின் ‘பிளான் ஏ’ அது தோல்வியடைந்தது. அதன்பின்னர் மாவனெல்லையில் புத்தர்சிலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்பின்னர் இது தொடர்பில் பாதுகாப்பு சபையை கூட்டுமாறு கூறியும் அதனை செய்யவில்லை. இதனால் விசாரணைகளை மூடி மறைக்க திட்டமிட்டு முயற்சிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகங்களுக்கு காரணங்கள் இருக்கின்றன.

