
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் போட்டியிடார்!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட மாட்டார் என்பதுடன், அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவும் மாட்டார் என்று ராஜபக்ஷ குடும்பத்தின் நெருங்கிய உறவினர்களில் ஒருவரான இலங்கையின் முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்கவை நம்பி அவரை சுற்றியிருக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இறுதியில் மீண்டும் அந்தக் கட்சியுடன் கைகோர்கும் நிலைமையே ஏற்படும் என்றும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
இணையத்தள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இவற்றை கூறியுள்ளார்.
அதன்போது அவர் கூறியுள்ளதாவது,
ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதிக்கு ஒருபோதும் இடமளிக்கப்படாது என்பதனை உறுதியாக கூற முடியும். அவரை கட்சி ஆதரவாளர்கள் விரும்பவில்லை. கோத்தாபய ராஜபக்ஷவை விரட்டியடிக்க போராட்டத்திற்கு அவரும் ஆதரவளித்துள்ளார். இவ்வாறானவரை கட்சி ஆதரவாளர்கள் விரும்பமாட்டார்கள். எவ்வாறாயினும் பொதுஜன பெரமுனவை சேர்ந்த ஒருவரே வேட்பாளராவார். இது தொடர்பில் அடுத்த வருடத்திலேயே கட்சி அறிவிக்கும்.
அதேபோன்று அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க களமிறங்கவும் மாட்டார் என்பதனையும் உறுதியாக கூற முடியும். அவர் அப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெறுவாரே தவிர வேட்பாளராக மாட்டார். அந்தளவுக்கு அவரிடம் வாக்கு வங்கி இல்லை. இதனால் அவரை சுற்றியிருக்கும் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மீண்டும் பொதுஜன பெரமுனவுடன் கைகோர்க்கும் நிலைமையே ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்.

