விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இலங்கையர் மூவர் இந்தியாவில் கைது

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் இலங்கையர் மூவர் இந்தியாவில் கைது

இந்தியாவின் பெங்களூர் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் தங்கியிருந்த இலங்கை பிரஜைகள் மூவர் அந்த நாட்டு மத்திய குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் சாத்தியமான தொடர்புகள் இருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலைக் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இந்திய பிரஜை ஒருவருடன் பெங்களூர் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்த நிலையிலே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட சந்தேக நபர்களுக்கு இலங்கை பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு இருப்பதை மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் கண்டறிந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், சந்தேக நபர்கள் மூவர் மீதும் ஏற்கனவே கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஆதார் அட்டை நகல்கள் பறிமுதல்

சந்தேக நபர்கள் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள், பேருந்து பயணச்சீட்டுகள், விசிடிங் கார்டுகள், பத்திரிக்கை பிரசுரங்கள், வாடகை ஒப்பந்த நகல்கள், ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர்அட்டைகளின் நகல்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடபப்ட்டுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுடனும் தொடர்புகளை பேணிவந்த நபர் ஒருவரின் உதவியுடன் குறித்த நால்வரும் பெங்களூர் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்துள்ளனர்.

குறித்த நபர் போதைப்பொருள் கடத்தல் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மத்திய கிழக்கு நாடான ஓமானில் முன்னதாக கைது செய்யப்பட்ட நபர் என்பதும் தெரியவந்துள்ளது.

படகு மூலம் இந்தியாவிற்குள் பிரவேசித்த இலங்கையர்கள்

கைது செய்யப்பட இலங்கை பிரஜைகள் மூவரும் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்குள் பிரவேசித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த மூவரும் சென்னையில் இருந்து தரை மார்க்கமாக பெங்களூர் சென்று அங்கு 20 நாட்கள் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவற்றை மீறி சந்தேக நபர்கள் மூவரும் எவ்வாறு நாட்டுக்குள் பிரவேசித்தார்கள் என்பது குறித்து தெளிவில்லை எனவும் இந்தியாவின் மத்திய குற்றப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில், வெளிநாட்டவர் சட்ட பிரிவுகள் 14,14(c) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 109,120B,212 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )