தொடரும் பல்கலை மாணவர்களின் தற்கொலைகள் – மனஅழுத்தமும் ஒரு காரணமா?

தொடரும் பல்கலை மாணவர்களின் தற்கொலைகள் – மனஅழுத்தமும் ஒரு காரணமா?

யாழ்ப்பாணம் – சுழிபுரத்தில் பட்டதாரி மாணவி ஒருவர் தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்குணரத்தினம் கௌசி (27) என்ற மாணவியே தனது வீட்டில்தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், குடும்பத் தகராறு காரணமாக உயிரை மாய்த்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

யுவதியின் பெற்றோர் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பட்டமளிப்புக்கு பெற்றோர் இருவரையும் சமாதானப்படுத்தி அழைத்து சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைகழகத்தில் கல்வி கற்ற குறித்த மாணவி அண்மையில் தான் பட்டம் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யுவதி அதிகமான மன அலுத்தத்துடன் காணப்பட்டதாக யுவதியின் நண்பர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

யுவதியின் மரணத்துக்கு காரணம் தெரியாத நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கொடிய மற்றும் பயங்கரமான செயல்களில் ஈடுபடுமாறு கட்டளையிடப்படும் வீடியோ விளையாட்டில் ஈடுபட்டு வந்த யாழ்-பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் பயின்று வந்த மாணவன் ஒருவர் கடந்த 16ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

பல்கலைகழக மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை கல்வி பயிலும் மாணவர்களும் தற்கொலை செய்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டிவருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.

பாடசாலை மட்டத்திலிருந்தே தற்கொலை தொடர்பிலான விடயங்கள் மாணவர்கள் மத்தியில் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பது கட்டாயமாகும்.

பாடசாலை காலங்கள் முதலே பெற்றோல்களால் ஏற்படும் மன தாக்கங்கள், காதல் விவகாரங்கள் என்பனவே பிரதான தற்கொலைகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது.

இதனடிப்படையில், இலங்கையில் 10 தொடக்கம் 24 வயதுக்குட்பட்ட இளைஞர், யுவதிகளில் 39 வீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் குழு ஒன்று நடத்திய ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் மன அழுத்த பாதிப்பானது குறிப்பிடத்தக்க வகையில் அதிகமாக உள்ளதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2003 முதல் 2023 வரை நீடித்த இந்த ஆய்வு, 52,778 நபர்களைக் கொண்ட விரிவான பங்கேற்பாளர் குழுவை உள்ளடக்கியுள்ளது.

10 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே மனச்சோர்வு அதிகமாக இருப்பது ஆய்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.

அதிர்ச்சியூட்டும் வகையில், இலங்கையில் ஏறக்குறைய 39 வீத இளைஞர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 18.4 வீதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தாய்வழி மக்கள் மற்றும் 25 முதல் 60 வயதுக்குட்பட்ட பெரியவர்கள் முறையே 16.9 வீதம் மற்றும் 8.7 விகிதம் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனவரி தொடக்கம் ஜூன் மாதம் வரையிலான 6 மாத காலப்பகுதியில் நான்கு சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

இதில், காத்தான்குடி பொலிஸ் பிரிவில் 9 பேரும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவில் 10 பேரும், வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் 10 பேரும், களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 13 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதுடன், ஜூலை 1 ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 8 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

எனவே, கடந்த 2022ஆம் ஆண்டின் புள்ளிவிபரத்தையும் இந்த ஆண்டின் 6 மாத கால புள்ளிவிபரத்தையும் ஒப்பிடும்போது, தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய புள்ளிவிபரம் காட்டுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )