
13வது திருத்தம் தொடர்பில் அரசின் நிலைப்பாடு சம்பந்தமாக எதிர்க்கட்சிகள் மத்தியில் சிக்கலான நிலை
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம், சர்வக்கட்சி மாநாட்டில் 13 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பில் முன்வைத்த கருத்துக்கள் காரணமாக அந்த திருத்தச்சட்டம் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிக்கலான நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
சர்வக்கட்சி மாநாட்டில் கருத்து வெளியிட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைவரும் கூட்டதாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கூறியிருந்தார்.
எனினும் சர்வக்கட்சி மாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கூட்டணி கட்சியான பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம், எந்த ஜனாதிபதியும் 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் ஏன் அவர்கள் அதனை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதை தேடிபார்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
ஜனாதிபதியின் நிலைப்பாடு மற்றும் ஜனாதிபதி பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் கட்சியின் பிரதான தரப்பிற்கும் இடையில் காணப்படும் கருத்து முரண்பாடு தொடர்பில் சர்வக்கட்சி மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க கேள்வி எழுப்பி இருந்தார்.“நீங்கள் முன்வைத்த யோசனைக்கு அமைவான உங்களது நகர்வு மிக சிறந்தது.
அதனை எதிர்க்க எவருக்கும் முடியாது.எனினும் இது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனையா அல்வலது அரசாங்கத்தின் யோசனையா என்பது குறித்து நாங்கள் தெளிவுப்பெற வேண்டும்.பொதுஜன பெரமுனவின் செயலாளர் கருத்து வெளியிட்ட பின்னர், எங்கள் மனதில் இருந்த சந்தேகம் சற்று அதிகரித்துள்ளது.
இதனால், ஜனாதிபதி முதலில் தனது யோசனையை அரசாங்கத்தின் யோசனையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.அதனை அரசாங்கத்தின் வேலைத்திட்டமாக மாற்ற வேண்டும். இதன் பின்னர் அதற்கான வரைவை எம்மிடம் சமர்ப்பியுங்கள்.
அதனை அடிப்படையாக கொண்டு விரிவான பேச்சுவார்த்தைக்கு செல்ல நாங்கள் இணங்குவோம். அது தொடர்பில் எந்த சிக்கலும் இல்லை” என வீரசுமன கூறியுள்ளார்.

