
’13’ ஐ முழுயைாக அமுலாக்க ஆதரவு; சு.க.பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர
13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முழுயைாக தமது ஆதரவை வழங்குமென அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
கொழும்பு டார்லி வீதியில் உள்ள சு.கவின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டில் ஆரம்பம்முதல் சு.க உறுதியாக உள்ளது.
ஆனால், அதில் உள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அதற்கான உரிய பொறிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.
2015 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அதற்கான வரையறைகள் இருக்க வேண்டுமென கூறியிருந்தோம். எமது முன்மொழிவுகளையும் அதற்காக வழங்கியிருந்தோம்.
அதிகாரப் பகிர்வை கட்டம்கட்டமாக மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், அது தெற்கில் சிங்கள மக்களை பெரிதும் பாதிக்கும் ஒரு விடயமாக உள்ளது.
தமிழ், சிங்கள மக்களின் பிரச்சினைகளை முற்போக்காக காணும் ஒரு கட்சி என்ற அடிப்படையில் அதிகாரப் பகிர்வை கட்டம் கட்டமாக மேற்கொள்ள நாம் முழுமையான ஆதரவை வழங்குவோம் என்பதுடன், நாளையதினம்(இன்று) கூட்டத்திலும் கலந்துகொள்வோம் என்றார்.

