
அரசியலமைப்பை மீற ஜனதிபதிக்குக் கூட அருகதை இல்லை
13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது சட்ட ரீதியாக அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயம். இந்த அரசியல் சாசனத்தை மீற ஜனதிபதிக்கு கூட அருகதை இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. தொடர்ந்தும் பேசுகையில்,
இந்தியாவுக்கு செல்ல முன்னர் எம்மை அழைத்து பேசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது அரசிலமைப்பு திருத்தத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை தரமுடியாது என்று கூறினார். அவருக்கு ஒன்றை தெளிவாக கூற விரும்புகின்றோம். நாங்கள் கோரும் தீர்வு சமஸ்டி அடிப்படையிலானது.அதில் நாங்கள் உறுதியாகவுள்ளோம்.
இந்த 13 என்பது சட்ட ரீதியாக அரசியலமைப்பில் உள்ள ஒரு விடயம். இந்த அரசியல் சாசனத்தை மீற ஜனதிபதிக்கு கூட அருகதை இல்லை. ஆகவே இந்த விடயத்தை மீறுகின்ற எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்ற ,சட்டத்திற்கு பதில் சொல்கின்ற வாய்ப்பை உண்டுபண்ணக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபடக்கூடாது.
இந்தியாவும் 13 ஆவது அரசியலமைப்பு திருத்த விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலேயே அது தொடர்பில் ஒரு அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்க வேண்டுமென நாம் கோரி வருகின்றோம்.
ஆனால் இலங்கை அரசு ,ஜனாதிபதி உட்பட இந்த அரசியல் சாசனத்தை மீறுகின்ற பாதகச் செயலை செய்து கொண்டிருக்கின்றார்கள் சட்டத்தை மீறுகின்ற தலைவர்களாக இருக்கின்ற நிலையில் ஏனைய சாதாரண மக்கள் சட்டத்தை எப்படி மதிப்பார்கள் எனக்கேள்வி எழுப்பினார்.

