ரஷ்யாவில் அடிமைகளாக சிக்கியிருக்கும் யாழ்ப்பாண தமிழர்கள்

ரஷ்யாவில் அடிமைகளாக சிக்கியிருக்கும் யாழ்ப்பாண தமிழர்கள்

ரஷ்யாவில் 500க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அடிமைகளாக சிக்கியிருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செய்தி தொடர்பாளர் செனரத் யாப்பா இதனை தெரிவித்தார்.

மனித கடத்தல் என்பது உலகிலேயே மோசமான நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த காலப்பகுதியில் குறிப்பாக 1970களின் பின்னர், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு இங்குள்ள மக்கள் சட்டவிரோதமான முறையில் குடிபெயர்ந்தனர்.

எவ்வாறாயினும், 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் வருபவர்களை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியா கடும் நடவடிக்கைகளை எடுத்திருந்தது.

தற்போது ஐரோப்பிய நாடுகளும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை கட்டுப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

வெறுங்கையுடன் இலங்கை செல்ல நேர்ந்தால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்

சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் சென்று முகாம்களில் சிக்கியிருக்கும் இலங்கையர்கள் பற்றிய செய்திகள் கடந்த காலங்களில் வெளியாகியிருந்தன.

இவ்வாறான செய்தியொன்றே தற்போதும் வெளியாகியுள்ளது. சட்டவிரோதமான முறையில் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்ட இலங்கையர்கள் அங்கு பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிலுள்ள முகாம்களில் அடிமைத் தொழிலில் ஈடுபட்டு வரும் இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

“இலங்கையில் உள்ள எங்கள் பெயர்கள், கிராமங்களைக் குறிப்பிட வேண்டாம். அப்படி நடந்தால் நமக்கு என்ன நடக்கும் என்று தெரியவில்லை. இது ஒரு பெரிய மோசடி. இந்த வலையில் நாங்கள் சிக்கியுள்ளோம்.

எங்களோடு வேலை பார்க்கும் பலர் நிறைய பணம் செலவழித்திருக்கிறார்கள். சிலர் வீடுகளை அடமானம் வைத்து பணம் சம்பாதிக்க இங்கு வந்துள்ளனர். மற்றவர்கள் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.

மற்றொரு தரப்பினர் குடும்பத்தின் அனைத்து தங்க பொருட்களையும் அடகு வைத்துள்ளது. வெறுங்கையுடன் இலங்கை செல்ல நேர்ந்தால் தொடர் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.

எப்படியும் ரஷ்யாவில் கஷ்டப்பட்டு உழைத்து நாடு திரும்புவதற்கு செலவழித்த பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். எனவே, தற்போது இருக்கும் நரகத்தில் இருந்து வெளியேற உதவுங்கள்’’ என ரஷ்யாவில் பணியாற்றும் இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்.

”சிறிய அறையில் 20 பேர் தங்கியுள்ளோம்”

உள்நாட்டில் செயற்படும் முகவரங்கள் ஊடாக நாங்கள் ரஷ்யாவிற்கு வந்துள்ளோம். நாங்கள் வேலை செய்யும் ஆடை நிறுவனத்தில் கிட்டத்தட்ட இருநூறு பேர் வேலை செய்கிறார்கள். இரண்டு ஆண்கள். மற்றவர்கள் பெண்கள்.

நாம் தைக்கும் துண்டுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப எங்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் வேலை. ஒரு நாள் மட்டும் விடுமுறை உண்டு.

அப்படி உழைத்தாலும் மாதச் சம்பளம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்க்கும் குறைவாகவே கிடைக்கின்றது. எங்களிடம் கொடுத்த ஒப்பந்தப்படி, மாதந்தோறும் 28 ஆம் திகதி சம்பளம் வழங்க வேண்டும்.

ஆனால் எந்த மாதமும் 28 ஆம் திகதி சம்பளம் வழங்கப்பவில்லை. மேலும் சரியான உணவும் இல்லை. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒரு துண்டு இறைச்சி மற்றும் மீன் சிறிது சோறு கொடுக்கப்படுகிறது.

மாலையில், தேநீருடன் ஒரு பனீஸ் மற்றும் வாழைப்பழம் பரிமாறப்படுகிறது. காலை பத்து மணிக்கு தேநீர் வழங்கப்படுகிறது. நாங்கள் தங்கியுள்ள சிறிய அறையில் 20 பேர் வரையில் இருக்கின்றோம்.

எங்கள் பொருட்கள் எதையும் அறையில் வைக்க அனுமதிக்கப்படவில்லை. அந்த பைகளை தனி அறையில் வைத்து பாதுகாக்க ஒவ்வொருவரின் மாத சம்பளத்தில் இருந்து 150 ரூபிள் கழிக்கப்படுகிறது.

அறையில் எங்களுக்கு கொடுக்கப்பட்ட லாக்கரில் இரண்டு உள்ளாடைகள், ஒரு நைட்டி மற்றும் இரண்டு வேலை சீருடைகள் மட்டுமே வைக்கப்படும். இரண்டு உள்ளாடைகளையும் மாறி மாறி அணிய வேண்டும்.” என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

பன்றிக் பண்ணைகளில் வேலை

இதனிடையே, இந்திய பிரஜை ஒருவரின் தலைமையில் மனித கடத்தலில் இந்த இலங்கையர்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஷ்யாவின் தலைநகரான மொஸ்கோவின் புறநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்காக இந்த இலங்கையர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அந்த இலங்கையர்களுக்கு ரஷ்யாவில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படாமல் அவர்கள் பன்றிப் பண்ணைகளில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்றக் கூடிய வசதிகளை முதலாளிகள் வழங்கவில்லை என அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

நூற்றுக்கணக்கான இலங்கையர்கள் சிறிய அறைகளில் தங்க வேண்டியுள்ளதுடன், அவர்களது வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் அந்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

விருப்பமுள்ளவர்கள் நாடு திரும்ப முடியும்

இவ்வாறான நிலையில், குறித்த விடயம் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை ஒருவன் செய்தி பிரிவு தொடர்புகொண்டு பேசியிருந்தது.

இதன்போது கருத்து வெளியிட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், இந்த விடயம் தொடர்பில் நாளை முழுமையான அறிக்கையை வெளியிடவுள்ளாக குறிப்பிட்டார்.

ரஷ்யாவில் பணியாற்றும் இலங்கையர்களில் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களில் குறிப்பிட்ட அளவிலானவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், நாடு திரும்ப விருப்பமுள்ளவர்கள் நாடு திரும்ப முடியும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )