
குருந்தூர் மலை விவகாரம் இன,மத வாதத்தின் உச்சம்; சுவீடனில் குர்-ஆன் எரித்ததை கண்டித்த ஜனாதிபதி எங்கே?
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் வழிபாடு நடத்துவதற்கு பௌத்த பிக்குகள் மற்றும் பொலிஸார் இடையூறு விளைவித்தமைக்கு தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
குருந்தூர் மலையில் அண்மையில் தமிழ் மக்கள் பொங்கல் பொங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது.
அதற்கமைய, அங்கு சென்ற மக்கள் பொங்கல் பொங்குவதற்கு முற்பட்டவேளையில் பௌத்த பிக்குகளும் , பெரும்பானமையினரும் இடையூறு விளைவித்ததுடன் பொலிஸாரும் அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்டு பொங்கல் பொங்குவதற்கு தடையேற்படுத்தினர்.
இந்த சம்பவம் வழிபாட்டு உரிமையை மறுப்பதாக தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
குருந்தூர் மலைப்பகுதியை விட்டு கொடுப்பதற்கு நாம் ஒருபோதும் தயாரில்லை – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்
பொங்கல் பொங்கி வழிபாட்டில் ஈடுபடுவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த போதிலும் பொலிஸார் மற்றும் சிங்கள பிக்குகள் இணைத்து அதனைத் தடுத்திருப்பதன் மூலம் தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் குருந்தூர் மலைக்கு வருகை தந்திருந்த பௌத்த பிக்குகள் மற்றும் சிங்களவர்களை காட்டிலும் அங்கு முன்னிலையான பொலிஸார் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாகவும் தம்மை தாக்க முற்பட்டதாகவும் அங்கிருந்த பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டி வெளியேற்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையில் அமைந்துள்ள ஆதிசிவன் ஆலயத்தில் பல ஆண்டுகளாக மக்கள் வழிபாட்டில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கு தொடர்ந்தும் இடமளிக்கப்படவேண்டியது அவசியம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலைப்பகுதியை விட்டு கொடுப்பதற்கு தாம் ஒருபோதும் தயாரில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் இந்திய பிரதமரிடமும் இந்திய அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்த எதிர்பார்த்துள்ளோம் – மாவை சேனாதிராஜா
குருந்தூர் மலையில் பொங்கல் பொங்குவதற்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்த அதற்கு இடையூறு ஏற்படுத்தியமையை கடுமையாக கண்டிக்கிறேன் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் வழிபாட்டு உரிமை மீறப்படுவது மிகுந்த கவலையளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்தியா செல்வதற்கு முன்னர் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாகவும் இந்து மக்களின் மத வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பில் இந்திய பிரதமரிடமும் இந்திய அரசியல் தலைவர்களிடமும் வலியுறுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
சுவீடனில் புனித குர் – ஆன் எரிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் வாய்மூடி இருப்பது ஏன் ? – சுரேஷ் பிரேமச்சந்திரன்
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் ஏற்கனவே ஜனாதிபதியுடன் கலந்துரையாட பட்டுள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அப் பகுதிக்கு வழிபட சென்ற இந்துக்களுக்கு எதிராக பொலிஸார் மிக மோசமாக நடந்து கொண்டது இன , மதவாதத்தின் உச்சகட்டமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
சுவீடனில் புனித குர் – ஆன் எரிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தில் வாய்மூடி இருக்கக்கூடாது என்றும் கற்பூரத்தை பாதணிகளால் அணைத்த பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப் போகிறார் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
குருந்தூர் மலை விவகாரத்தை மத கலவரமாக மாற்ற முயற்சிக்கிறார்கள் – சித்தார்த்தன்
முன்னர் இந்த நாட்டில் இது ஒரு மொழி பிரச்சனையாக மாத்திரமே இருந்தது, தற்போது இது ஒரு மதப் பிரச்சினையாக மாறிக் கொண்டு வரும் நிலையை இவர்கள் உருவாக்குகிறார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்னரும் பொலிஸார் மற்றும் பிக்குகள் பொங்கல் நிகழ்வினை குழம்பினார்கள்.
ஒருவர் இதற்கென முகநூலில் விளம்பரம் கொடுத்து சிங்கள மக்களை ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறார்.
பொலிஸார் பாதணிகளை கொண்டு கற்பூரத்தை அணைக்கிறார்கள்.
முன்னர் இந்த நாட்டில் இது ஒரு மொழி பிரச்சினையாக மாத்திரமே இருந்தது, தற்போது இது ஒரு மதப் பிரச்சினையாக மாறிக் கொண்டு வரும் நிலையை இவர்கள் உருவாக்குகிறார்கள்.
இவர்கள் இதனை வேண்டும்மென்றெ செய்கிறார்கள் என நான் நினைக்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

