ரணில் இந்தியா செல்ல முன் அனுப்பப்படும் மோடிக்கான கடிதத்திலும் பிளவுபட்ட தமிழ் கட்சிகள்; தமிழ் மக்கள், தமிழ் புத்திஜீவிகள் கடும் விசனம்

ரணில் இந்தியா செல்ல முன் அனுப்பப்படும் மோடிக்கான கடிதத்திலும் பிளவுபட்ட தமிழ் கட்சிகள்; தமிழ் மக்கள், தமிழ் புத்திஜீவிகள் கடும் விசனம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பிலும் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய அரசு வலியுறுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் விடயத்திலும் தமிழ் தேசிய கட்சிகளிடையில் மீண்டும் பிளவுகள் ஏற்பட்டுள்ளமை தமிழ் மக்களிடமும் தமிழ் புத்திஜீவிகளிடமும் கடும் விசனங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21 ஆம் திகதி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்யவுள்ளார். இதற்கான முன்னேற்பாடாக இந்திய வெளியுறவுச் செயலர் வினய்குவத்ரா கடந்த திங்கட்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி ரணிலின் இந்திய விஜயமானது இருதரப்புஉறவில் நேர்மறையான மாற்றமொன்றின் புள்ளி என்பதனை உறுதிப்படுத்துவதற்கான முயற்சியாகவே தனது விஜயம் அமைந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை தாங்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் மேலும் அவரது விஜயத்தை வெற்றிகரமான ஒன்றாக மாற்றவும் அவ்வழியில் தங்கள் உறவை வெற்றியடையச் செய்யவும் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறான முக்கிய விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ளவுள்ள நிலையில் தமிழ் தேசியக்கட்சிகள், தமிழ் தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பிலும் இந்தியா வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு தொடர்பிலும் ஒரு கூட்டு கடிதத்தை நரேந்திர மோடிக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் வழக்கம் போலவே இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் மக்களுக்கான தீர்வை வலியுறுத்தி கடிதம் அனுப்பும் விடயத்திலும் தமிழ் தேசியக் கட்சிகள் மூன்றாக பிளவடைந்துள்ளன.

இதன் முதல் பிளவாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனியாக கடந்த திங்கட்கிழமை தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான இந்திய பிரதமருக்கான கடிதத்தை யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரிடம் நேரில் கையளித்தது.

அக்கடிதத்தில் ஒற்றையாட்சிக்குட்பட்ட எந்தவொரு தீர்வையும் தமிழர்கள் நிராகரிப்பதை இந்தியா ஏற்று தமிழரின் அந்த நிலைப்பாட்டுக்கு உறுதுணையாக நிற்பதோடு தமிழர்தேசத்தை அங்கீகரித்து அதை பாதுகாக்கின்ற வகையிலானதும் தமிழர்கள் ஒருபோதும் இழக்கமுடியாத தங்களது சுயநிர்ணய உரிமையை அனுபவிக்க கூடியதுமான ஒரு சமஷ்டி தீர்வுக்கான தன் ஆதரவை வெளிப்படுத்தவேண்டும் எனவும் 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான தீர்வை ஏற்க முடியாதெனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில் இரண்டாவது பிளவாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்புவதற்காக தயாரித்த கடிதத்தில் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்ட நிலையில் கடிதம் இன்று வியாழக்கிழமை யாழ் இந்திய தூதரகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

குறித்த கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணி சார்பில் க.வி.விக்னேஸ்வரனும் புளொட் சார்பில் த.சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஐனநாயக போராளிகள் கட்சி சார்பில் வேந்தனும் ரெலோவின் சார்பில் செல்வம் அடைக்கலநாதனும் தமிழ் தேசிய கட்சி சார்பில் ஶ்ரீகாந்தாவும் கையொப்பமிட்டுள்ளனர்

இந்தக் கடிதத்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் பிரகாரம் கொண்டு வரப்பட்ட 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதுடன் வடக்கு,கிழக்கு மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கட்சிகளிடையிலான மூன்றாவது பிளவாக இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பிலும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக தனியாக கடிதம் ஒன்றை அனுப்ப தீர்மானித்துள்ளது.

தமிழ் மக்களுக்கான தீர்வு தொடர்பிலும் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கூட்டு கடிதத்தை நரேந்திர மோடிக்கு அனுப்ப ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் தமிழ் மக்கள் கூட்டணியும் முயற்சிகளை எடுத்திருந்த போதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் மாவை சேனாதிராஜா தலைமையிலான இலங்கை தமிழரசுக்கட்சியும் தனி வழி செல்லத் தீர்மானித்ததால் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பும் விடயத்தில் தமிழ் தேசிய கட்சிகளிடையில் மீண்டும் பிளவுகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன் இந்திய பிரதமருக்கு மூன்று தரப்புகளாக பிரிந்து அனுப்பப்படும் கடிதங்களில் கூட தமிழ் தேசிய கட்சிகள் தனித்தனியான வெவ்வேறான தீர்வுகளைக் கோரியுள்ளமை தமிழ் மக்களிடையிலும் தமிழ் புத்திஜீவிகளிடமும் கடும் விசனங்களை ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )