
மொட்டுக் கட்சியினரை ஏமாற்றுவதற்கு முயற்சி
உள்ளூராட்சி சபைகளின் மொட்டுக் கட்சி உறுப்பினர்களை ஏமாற்றுவதற்கான செயற்பாடே கலைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளை மீள செயற்படுத்துவது தொடர்பான பிரேணை என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,
கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைகளை மீள கூட்டுவதற்கு விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் தனிநபர் பிரேரணையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசியலமைப்புக்கமைய அவ்வாறு செய்ய முடியாது. 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் பிரகாரம் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும். ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின் மக்கள் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன்படி 1983இல் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்க சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில் உள்ளூராட்சி சபைகளை மீளக் கூட்டுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும். இந்நிலையில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடையாது. அவ்வாறு இருந்தாலும் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியுமென்றால் ஏன் தேர்தலை நடத்த முடியாது என்ற சிக்கல் ஏற்படும். இதன்படி உள்ளூராட்சி சபைகளின் மொட்டு கட்சி உறுப்பினர்களை ஏமாற்றுவதற்காகவே இதனை செய்கின்றனர் என்றார்.

