ரணில் அங்கு செல்ல முன்னர் மோடிக்கு கடிதம் தயாராகின்றது

ரணில் அங்கு செல்ல முன்னர் மோடிக்கு கடிதம் தயாராகின்றது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசாங்கம் தமிழர் தரப்பு விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை தயாரித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்ப தயாராகி வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பிரதமருக்கான கடிதம் ஏற்கனவே தயாரிக்கப் பட்டிருக்கின்றது. மிக விரைவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்தக் கடிதம் அனுப்பப்படும்.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியைச் சேர்ந்த ஈ.பி.ஆர்.எல்.எப் , ரெலோ, புளொட், ஐனநாயக போராளிகள் கட்சி, தமிழ் தேசிய கட்சி ஆகியன கையெழுத்திடவுள்ளன.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கு மாத்திரம் இல்லாமல் தமிழ் மக்கள் கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் இரா.சம்பந்தன் ஆகியோரிடம் கையெழுத்து பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடிதத்தில் கையெழுத்திட தமிழ் மக்கள் கூட்டணியின் விக்னேஸ்வரன் முன்வந்திருக்கின்றார். அதேபோல இரா.சம்பந்தனை, சித்தார்த்தன் சந்தித்து பேச உள்ளார். அவரும் இணங்கி தயாராகும் பட்சத்தில் இந்த வாரத்துக்குள் இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக் கடிதம் மூலம், தமிழ் தரப்பு என்பது இலங்கையில் இருக்கக்கூடிய சகல அரசாங்கங்களாலும் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வந்திருக்கின்றது. 13வது திருத்தம் என்பதை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு யாரும் தயாராகவில்லை. காணி பொலிஸ் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராக இல்லை.

ஆனால் இலங்கையினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு இந்திய அரசாங்கம் உதவி செய்திருக்கின்றது. இந்தியாவின் ஆதரவு, உதவி இல்லாமல் இலங்கையின் பொருளாதாரம் சுமூகமாயிருக்க முடியாது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நடாத்தப்பட்ட வேண்டும், 13வது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பன போன்ற விடயங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்திய அரசாங்கம் அழுத்தமாக பேசவேண்டும் வலியுறுத்தப்படும் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )