கொக்குத்தொடுவாய் புதைகுழிக்குள் இருப்பது யாரது உடல்கள்?

கொக்குத்தொடுவாய் புதைகுழிக்குள் இருப்பது யாரது உடல்கள்?

கொக்குத்தொடுவாயில் காணப்படுவது படையினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகளின் சடலங்களாயிருக்கலாம் எனக் கருதுவதாக, இந்தப் புதைகுழியை நேரில் சென்று பார்வையிட்ட சமூக ஆர்வலர் பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்

அதன் அருகாமையில் இரண்டுபக்கமும் அடுக்கடுக்காக விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் சீருடைகள் போன்றவை காணப்படுவதாகவும் அவர்தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியை நாங்கள் சென்று பார்வையிட்டபோது மனிதஎச்சங்களின் எலும்புகள் மேல்நோக்கி காணப்பட்டன.

விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் பயன்படுத்தியிருக்க கூடிய,அணிந்திருக்க கூடிய சேர்ட்கள்,மேலாடைகள் காணப்படுகின்றன.பெண்கள் பயன்படுத்தக் கூடிய மேலாடைகளும் காணப்பட்டன.

இந்த மனித எச்சங்கள் நீண்டகாலமாக இருந்ததாக கருதமுடியாத வண்ணம் காணப்படுகின்றன. அவை ஒருமீற்றர் ஆழமான பகுதியிலேயே காணப்பட்டன. இதன் மூலம், இது பத்து தொடக்கம் 15 வருடகாலத்திற்குட்பட்டதாகயிருக்கலாம் என்றே தோன்றுகிறது. அதாவது இறுதிப்போர் நடைபெற்ற காலத்தில் புதைக்கப்பட்டதா அல்லது கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதா என்ற கேள்விகள் எங்களுக்கு எழுந்துள்ளன.

இது இறுதிப்போரில் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்க போராளிகளின் உடல் எச்சங்கள் என்றே தோன்றுகின்றது.

பெண்களின் உள்ளாடைகளும் காணப்படுவதால் இது இறுதிப்போரில் சரணடைந்த முன்னாள் போராளிகளின் உடல்களாகயிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நானும் அவ்வாறே நம்புகின்றேன்.அதனை உறுதி செய்ய விரும்புகின்றோம். 6 ஆம் திகதி வியாழக்கிழமை நீதிமன்றம் அகழ்வு செய்து ஆராயவுள்ளது.

இந்த உடல்கள் இராணுவத்தினருடையவை என்றால் அவர்கள் அங்கு அதனை புதைத்திருக்கமாட்டார்கள். தெற்கே அவர்களின் வீடுகளிற்கு கொண்டு சென்று கொடுத்திருப்பார்கள். இது விடுதலைப்புலிகளின் மனித எச்சங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

1984ம் ஆண்டிற்கு பின்னர் விடுதலைப்புலிகள் எவரும் நடமாடாத இடம் இது. முல்லைத்தீவிலிருந்து கொக்கிளாய் செல்கின்ற ஒரு நேரடிப்பாதை. குறுக்குப் பாதையும் இல்லை பிரதானவீதியில் உள்ளது.

இந்த பகுதியிலிருந்து 1984ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் மக்களை அவசரமாக வெளியேற்றியது.அதன் பின்னர் 2009 வரை இந்த பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

எங்கள் மக்கள் எவரும் அங்கு வாழவில்லை.இராணுவத்தினரின் முழுக் கட்டுப்பாட்டில் அந்தப் பகுதி காணப்பட்டது. நாயாற்றுப் பாலத்திற்கு அப்பால் இராணுவத்தினரின் முழு பாதுகாப்பில் அந்த பகுதி காணப்பட்டது.

ஆகவே இந்த மனித எச்சங்கள், அதற்கு முன்னர் இடம்பெற்ற போரில் அல்லது மோதலில் கொல்லப்பட்டவர்களுடையது என கருதுவதற்கான வாய்ப்பு இல்லை அந்த சந்தேகம் எங்களுக்கு எழவில்லை.

ஆனால் ஒன்றை மாத்திரம் தெரிவிக்க முடியும் இவை கடத்தப்பட்ட அல்லது சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களின் உடல்களாக இருக்கலாம்.

மேலும் அகழ்வுகள் இடம்பெறுகின்ற போதுதான், இவற்றில் பொதுமக்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உடல்கள் உள்ளனவா என்பது தெரியவரும்

நீதிபதியின் உத்தரவின் பேரில் மனிதஎச்சங்கள் காணப்பட்ட பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.ஆனால் பொலிஸார்மீது எங்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாதபடியினால் நாங்கள் அந்த பிரதேசமக்களை உள்வாங்கி சுழற்சிமுறையிலான அவதானிப்பு குழுக்களை நிறுத்தியுள்ளோம்.

இராணுவத்தினரும் பொலிஸாரும் அரசாங்கத்தின் துணையுடன் அந்த பகுதியிலிருந்து சான்றுப் பொருட்களை அகற்றக் கூடிய நிலை உருவாகலாம் என்பதற்காகவும் தடயப்பொருட்களின் சாட்சிப் பொருட்கள் ஒருபோதும் அழியக்கூடாது என்பதற்காகவும் நாங்களும் சமூக செயற்பாட்டாளர்களும் அந்த கிரா மக்களுடன் சேர்ந்து அவற்றை மறைமுகமாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம்.

இந்த மனித எச்சங்களின் சான்றுப்பொருட்களை அழித்துவிடுவார்கள் என்ற அச்சம் எம்மிடமும் பொதுமக்களிடம் காணப்படுகின்றது. இதனால் இந்த அகழ்வுகளும் விசாரணைகளும் சர்வதேச கண்காணிப்பின் கீழ் இடம்பெறவேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோள்.

வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பில் அரசாங்கம் கரிசனை கொண்டதும் இல்லை கரிசனை கொள்ளப் போவதுமில்லை.மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை.

நீர்விநியோக குழாய்க்காக தோண்டப்பட்ட பகுதியில் இரண்டடி அகலம் ஒரடி ஆழத்தில்தோண்டப்பட்ட குழியில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதன் அருகாமையில் இரண்டு பக்கமும் அடுக்கடுக்காக உடுப்புகள் அதாவது விடுதலைப்புலிகளின் சீருடைகள் போன்ற சீருடைகள் காணப்படுவதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

அவற்றை அகழ்வு செய்கின்ற போதுதான் எத்தனை உடல்கள்,மனித எச்சங்கள் உள்ளன என்பதை கண்டுபிடிக்கக் கூடியதாக இருக்கும்.

இந்த விவகாரம் நீதிமன்றத்திலே உள்ளதால் நாங்கள் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என நீதியமைச்சர் தெரிவித்துவிட்டார்.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் இந்தப் புதைகுழியில் பெரும் சந்தேகம் உள்ளது. புதைகுழியில் காணப்படுவது சீருடையாகயிருந்தாலும், காணாமல்போன பொதுமக்களும் இதற்குள் இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

இதேபோல இறுதிப் போரில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளையும் மனைவிமார் கணவன்மாரையும் கணவன்மார் மனைவிமாரையும் இராணுவத்தினரிடம் ஒப்படைத்து பின்னர் அவர்கள் காணாமல்போன பல சம்பவங்கள் உள்ளன. ஆகவே இந்த விசாரணைக்கு சர்வதேசத்தின் கண்காணிப்பு கட்டாயம் அவசியம்.

இந்த மனிதப்புதைகுழிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் விரைந்து உங்கள் கண்காணிப்பாளர்களை அனுப்புங்கள் என சர்வதேச சமூகத்தையும் உலக நாடுகளையும் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )