
தேர்தல்களை இல்லாது செய்வதற்கு முயற்சி; பெப்ரல் அமைப்பு கடும் கண்டனம்
உள்ளூராட்சி தேர்தலை நடத்தாது கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீளச் செயற்படுத்தவதற்கு முன்னெடுக்கப்படும் முயற்சிகள் தேர்தல் வரைபடைத்தை இல்லாது செய்யும் மற்றும் சர்வாதிகார போக்கின் அம்சமாகவே அமையும் என்று தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.
நெருக்கடி காரணமாக தேர்தலை நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டால் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளக் கூட்டுவதற்கான அதிகாரங்களை விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கும் வகையில் உள்ளூராட்சி சட்டங்களைத் திருத்துவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெடகொடவின் தனிநபர் பிரேரணை தொடர்பான வர்த்தமானி குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டே அந்த அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது.
பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் காலவரையறையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொருளாதார நிலைமையை காட்டி அரசாங்கம் தேர்தலை திட்டமிட்டு தொடர்ச்சியாக ஒத்தி வைத்து வருகின்றதாக தெரிகின்றது. எவ்வாறாயினும் உள்ளூராட்சி நிறுவனமொன்றின் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் அமைச்சருக்குள்ள அதிகாரத்திற்கமைய ஒரு வருடத்தால் அந்த காலத்தை நீடிக்க முடியும். இதன்படி ஒருவருட காலத்துக்கு நீடிக்கப்பட்ட போதும், அதற்கான தேர்தலை நடத்த முடியவில்லை.
இநநிலையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காது ஜயந்த கெட்டகொடவினால் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டு வந்து உள்ளூராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து தமக்கு தேவையான கால எல்லை வரை தேர்தலை நடத்தாது சபைகளை செயற்படுத்த முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தலாகும். இது தேர்தல் வரைபடத்தை இல்லாது செய்து செல்லும் சர்வாதிகார போக்கின் அம்சமாகவே அமையும்.
இந்த யோசனையை நிறைவேற்ற எவரேனும் மக்கள் பிரதிநிதி ஆதரவு வழங்கினால் அது மக்கள் இறையாண்மை மீதான மரண அடியாகவே அமையும் என்பதுடன், அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கான முறையற்ற முயற்சியாகவும் அமையும். இதனால் இதனை தோற்கடிக்க ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் கைகோர்க்க வேண்டியது தவிர்க்க முடியாத பொறுப்பாகும்.

