
வடக்கு கிழக்கில் ஏன் புத்த மதத் திணிப்பு ?; யாழில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் கேள்வி
வடக்கு கிழக்கு இந்துக்களின் தாயக வரலாற்று பூமியாக காணப்படுகின்ற நிலையில் புத்த மத அடையாளங்கள் மற்றும் திணிப்புக்கள் ஏன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கேள்வி எழுப்பினார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தபோதே இவ்வாறு கேள்வி எழுப்பிய இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் மேலும் கூறுகையில்,
தையிட்டி விகாரையைக் கட்டிய பிக்குவின் துவராடையைக் களைவதே புத்த சங்கத்தின் கடமையாக இருக்க வேண்டும் .
அரசியலமைப்பில் புத்த சமயத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை ஏற்றுக்கொள்ள முடியாது இலங்கையில் இந்து சமயமே முன்னர் தோன்றியது எனவும் முன்னாள் ஜனாதிபதியிடம் கூறினார்
இந்தச் சந்திப்பில் இலங்கை சிவசேனை மக்கள் சார்பில் பின்வரும் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு முன்னாள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடப்பட்டது
இந்தக் கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை சிவ பூமி இலங்கை முழுவதும் இந்துக் கோயில்கள். புத்த விகாரங்களிலும் இந்துக் கோயில்கள்.பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் கூடுதலான பழமையான சமயம் இலங்கையின் இந்து சமயம்.
இந்த வரலாற்றை மறந்தீர்கள். இந்தப் பின்னணியை மறுத்தீர்கள்.
இலங்கை அரசியலமைப்பில் புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுத்தீர்கள். 1972ஆம் ஆண்டு புத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்ற அரசியலமைப்பை உருவாக்கிய கட்சியே நீங்கள் தலைவராக இருக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி. அந்த வரலாற்றுத் தவறைத் திருத்துக. அரசியலமைப்பில் இந்து சமயத்துக்கு முன்னுரிமை. அதன்பின்பே அடுத்துவந்த புத்த சமயத்துக்கு முன்னுரிமை. இவ்வாறு புதிய அரசியல் அமைப்பை உருவாக்குக.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக. புத்த வாக்காளரிடம் ஆணை கோருக. இந்து வாக்காளர் உங்களை ஆதரிப்பர்.
இலங்கையின் வட கிழக்கு இந்துக்களுக்கு வரலாற்றுத் தாயகம். இலங்கையின் தென் மேற்கு, புத்தர்களுக்கு வரலாற்றுத் தாயகம். கிறிஸ்தவர்களுக்கும் முகமதியர்களுக்கும் வரலாற்றுத் தாயகம் இலங்கையில் இல்லை.
இந்த அடித்தளமே 1987இன் இலங்கை இந்திய உடன்பாடு. இலங்கை அரசும் மக்களும் ஏற்றுக்கொண்ட உடன்பாடு.
இந்த உடன்பாட்டை முழுமையாக நிறைவேற்றுக.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக.
அந்நியர்கள் கடல் வழியால் படையெடுத்து வந்தனர், 500 ஆண்டுகளுக்கு முன் வந்தனர். துப்பாக்கி முனையில் மதம் மாற்றினர். ஆபிரகாமிய சமயங்களுக்கு மதம் மாற்றினர். ஆபிரகாமிய ஆட்சி முடிந்தது. ஆனாலும் தொடர்ந்தும் மதம் மாற்றுகின்றனர். அந்தக் கொடுமையில் இருந்து விடுபட மதமாற்றத் தடையை ,பசுவதைத் தடையை அரசியலமைப்பு விதியாக்குக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இதை உள்ளடக்குக. .
இந்துக்களின் வரலாற்றுத் தாயகம் வட கிழக்கு. அங்கே புத்த அடையாளங்கள் ஏன்? புத்த மேலாதிக்கம் ஏன்?
இந்துத் தாயகத்தில் புத்த மேலாதிக்கத்தைத் தடுக்கும் கொள்கையையும் சட்டங்களையும் அரசியலமைப்போடு அமைக்க.
வழிபாட்டிடங்களில் உயிர்ப் பலியா? கொடுமை அல்லவா? இந்த மூடப் பழக்க வழக்கத்தை அறவே போக்குக. சட்டம் இயற்றுக. அரசியலமைப்பில் உள்ளடக்குக.

