
தேர்தலை உடன் நடத்துமாறு கோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்; நீதிமன்ற தடையுத்தரவுகளையும் மீறி பேரணி
உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்தி ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களினால் கொழும்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்னால் நேற்று வியாழக்கிழமை பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் கட்டுப்பாடுகளை விதித்து நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகளுக்கு மத்தியிலேயே இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
”மக்கள் ஆணைக்கு மதிப்பளித்து உள்ளூராட்சி தேர்தலை உடனடியாக நடத்து” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடு பூராகவும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் பெருமளவான வேட்பாளர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவர்களுடன் ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதற்கு முன்னர் இதற்கு எதிராக பொலிஸாரினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவை பெற்றிருந்தனர்.
இதன்படி, அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதி, கொடா வீதி மற்றும் சரண வீதி ஊடாக பொதுமக்களுக்கு இடையூறான வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தேர்தல் செயலக பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
எனினும் நீதிமன்ற தடையுத்தரவுகளையும் கடந்து பெருமளவான வேட்பாளர்கள் இந்தப் பகுதியில் கூடி ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தால் தேர்தல்கள் ஆணைக்குழு அமைந்துள்ள இராஜகிரியவிலுள்ள சரண வீதியூடான வாகன போக்குவரத்துக்கள் முழுமையாக தடைப்பட்டிருந்தன.
இதேவேளை இந்தப் பகுதியில் பெருமளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது தமது போராட்டத்தை இத்தோடு நிறுத்தப் போவதில்லை என்றும், தேர்தலை வென்றெடுக்கும் வரையில் நாடு பூராகவும் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தவர்கள் தெரிவித்தனர்.

