கோதாவின் கையாளே அமைச்சர் அலி சப்ரி; சாணக்கியன் எம்.பி.கூறுகிறார்

கோதாவின் கையாளே அமைச்சர் அலி சப்ரி; சாணக்கியன் எம்.பி.கூறுகிறார்

நாட்டை விட்டு பிறிதொரு நாட்டில் தஞ்சமடைந்த கோத்தபாய ராஜபக்ஸவின் கையாள்தான் வெளிவிவகாரத் துறை அமைச்சர் அலி சப்ரி. கோத்தபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்ட சொகுசு இல்லம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான செய்திகளையே நான் சபையில் கூறினேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

சபையில் நான் இல்லாத வேளையில் வெளிவிவகாரத்துறை அமைச்சர் எனது பெயரை குறிப்பிட்டு முறையற்ற வகையில் உரையாற்றியுள்ளார்.வெளிநாட்டு சக்திகளின் முகவராக நான் செயற்படுவதாக பைத்தியகாரத்தனமான கருத்துக்களை கூறியுள்ளார்.

வெளிவிவகாரத் துறை அமைச்சருக்கு உரித்தான அரச உத்தியோகபூர்வ இல்லம் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டுள்ளது என பத்திரிகைளில் வெளியான செய்தியை எனது உரையில் குறிப்பிட்டேன்.அதை அவர் பொய் என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் இன்றைய தினம் (நேற்று) பிரதான நிலை பத்திரிகைகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சுக்கு சொந்தமான கொழும்பு -07 உள்ள சொகுசு இல்லம் தற்போதைய வெளிவிவகாரத்துறை அமைச்சர் அலி சப்ரியின் இணக்கப்பாட்டுடன் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.கோத்தபாய ராஜபக்ஷவுக்கு மலல சேகர மாவத்தையில் வழங்கப்பட்ட இல்லம் அமைந்துள்ள பகுதி அதிக சத்தம் என்பதால் இவ்வாறு வெளிவிவகாரத்துறை அமைச்சருக்கு உரித்தான இல்லம் வழங்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் கோத்தபாய ராஜபக்ஸவின் கையாளாக ,புண்ணியத்துக்கு பாராளுமன்றம் வந்துள்ள அலி சப்ரி என்னை விமர்சிக்கிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.அலி சப்ரிக்கும் எனக்கும் தனிப்பட்ட பிணக்கு ஏதும் கிடையாது.நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த கோத்தபாய ராஜபக்ஸவுக்கு மக்கள் வரிப்பணம் செலவு செய்யப்படுவதை மக்களுக்கு பகிரங்கப்படுத்தினேன் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )