தேர்தலில் விரும்பியவர்களுக்கு வாக்களிக்க மக்கள் எப்போதும் தயார் ரணில்தான் தயாரில்லை

தேர்தலில் விரும்பியவர்களுக்கு வாக்களிக்க மக்கள் எப்போதும் தயார் ரணில்தான் தயாரில்லை

எந்தவொரு கட்சியினாலும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என்றும், மக்கள் தேர்தலுக்கு தயாரில்லை என்றும் ஜனாதிபதி கூறியமை வேடிக்கையானது என்று தெரிவித்த ஜே.வி.பி பிரசார செயலாளர் விஜித ஹேரத், முடிந்தால் மக்கள் ஆணைக்கு இடமளித்து காட்டுமாறு ஜனாதிபதியை கோருவதாகவும் தெரிவித்தார்.

ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மார்ச் 9 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி தேர்தலை அரசாங்கம் காரணங்கள் இன்றி ஒத்தி வைக்க நடவடிக்கை எடுத்தது. பின்னர் ஏப்ரல் 25 ஆம் திகதி அதனை நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் நிதி அமைச்சு அதற்கான நிதியை வழங்கவில்லை. இதனால் தேர்தல் திகதி குறிப்பிடப்படாது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஜனாதிபதிக்கு மக்கள் ஆணையும் கிடையாது. பாராளுமன்றத்திலும் மக்கள் ஆணை கிடையாது. உள்ளூராட்சி சபைகள் இயங்காது உள்ளன. மாகாண சபைகளும் இயங்காது உள்ளன. ஆளுநர்களின் ஊடாகவே மாகாண சபைகள் நடத்தப்படுகின்றன. ஜனாதிபதியினாலேயே அவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலைமையில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுகின்றது.

இந்நிலையில் எந்தவொரு கட்சியினாலும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாது என்றும், மக்கள் தேர்தலுக்கு தயாரில்லை என்றும் நுவரெலியாவில் ஜனாதிபதி கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து வேடிக்கையானதாகவே உள்ளது. மக்கள் ஆணையின்றி பதவிக்கு வந்துள்ள ஜனாதிபதிக்கு இவ்வாறாக கூறுவதற்கு எந்த தகுதியும் கிடையாது. முடிந்தால் மக்கள் ஆணைக்கு இடமளிக்குமாறு கேட்கின்றோம். அவர்கள் அப்போது தங்கள் முடிவை தெளிவாகத் தெரிவிப்பர்.

அத்துடன் தேர்தலுக்கு பணமில்லை என்று கூறுவது முற்றிலும் பொய்யாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக நாங்கள் திறைசேரியிடம் உள்ள நிதி தொடர்பில் ஆராய்ந்துள்ளோம். அந்த தகவல்களின்படி போதுமான நிதி உள்ளது. இவ்வாறான நிலைமையில் நிதியில்லை என்று கூறுவது பொய்யாகவே உள்ளது.

இதேவேளை பிரதமரினால் பொதுநிருவாக அமைச்சின் ஊடாக மாகாண செயலாளர்களுக்கு ஒவ்வொரு பிரதேச அபிவிருத்தி குழுவின் தலைவர்களினாலும் உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் பிரதிநிதியொருவரை நியமிக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் பிரதேச சபை தலைவர்களுக்கே அந்த பிரதி நிதியாக வாய்ப்பு கிடைக்கும். ஜனாதிபதியின் தலையீட்டில் நியமிக்கப்படுபவர்களாகவே இவர்கள் இருப்பர். இது முற்றிலும் ஜனநாயக விரோத செயற்பாடாகும். இவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை கைவிடுங்கள் என்று அரசாங்கத்தை கேட்கின்றோம். இது தொடர்பில் நாங்கள் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதுடன், அவ்வாறானவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்றும் கேட்கின்றோம் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )