
3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கப்பட்ட ரயில் விபத்து; இதுவரை 275 பேர் பலி;900 பேர்காயம்
இந்தியாவின் ஒடிசாவில் பாலசோர் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 3 ரயில்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.இதன் பின்னணியில், தொழில்நுட்ப குறைபாடு உள்ளதாக அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக 3 மாதங்களுக்கு முன்பே அதிகாரிகள் தரப்பில் மத்திய அமைச்சகத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் கடந்த பெப்ரவரி மாதமே கடிதம் எழுதியிருக்கிறார்.
முன்னதாக பிப்ரவரி 8ம் திகதி கர்நாடகாவில் ஹோசதுர்கா ரோடு ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக இரு ரயில்கள் மோதும் நிலை ஏற்பட்டிருக்கிறது. பின் அது நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து தவிர்ப்பை சுட்டிக்காட்டி, சிக்னலில் கடுமையான குறைபாடுகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயற்பாட்டு மேலாளர் ஹரி சங்கர் என்பவர் கடிதம் எழுதியிருந்தார்.
அது தற்போது வெளிவந்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஏன் அப்போதே உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடந்தது என்ன?
வெள்ளிக்கிழமை இரவு சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்ற நிலையிலேயே ஒடிசா ரயில் விபத்து நேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ரயில், சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் பயணித்ததில், இரு ரயில்களும் மோதுண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது.
அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு ‘சுப்ப பாஸ்ட் எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவையில் ஈடுபட்டு வருகிறது.
இந்தநிலையில், மேற்குவங்காளத்தின் ஷாலிமாரில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை இரவு ஒடிசா பாலாசோர் ரயில் நிலையம் அருகே 127 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துக்கொண்டிருந்தபோது, தவறுதலாக சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்துக்குள் சென்றுள்ளது.
இதனையடுத்து அந்த ரயில் , சரக்கு ரயிலை மோதிய நிலையில், சரக்கு ரயிலின் பெட்டிகள், அருகில் உள்ள தண்டவாளத்துக்குள் தூக்கியெறியப்பட்டன.
இதன்போது, மறுபுறத்தில் பெங்களூரில் இருந்து மேற்கு வங்காளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ‘சுப்ப பாஸ்ட் எக்ஸ்பிரஸ்’ ரயில் தண்டவாளத்தில் தூக்கியெறியப்பட்ட நிலையில் கிடந்த சரக்கு ரயில் பெட்டிகளுடன் மோதி பாரிய விபத்தை சந்தித்துள்ளது.
இதன்போதே 275 பேர் வரை உயிரிழந்தும் 900 பேர் வரை காயமடைந்தும் உள்ளனர்.
இவர்களில் 56 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

