
விமல் வீரவன்சவின் கூட்டணியில் பிளவு
இடதுசாரி கட்சிகள் இணைந்து உருவாக்கிய விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா கூட்டமைப்பிலிருந்து லங்கா சமசமாஜக் கட்சி விலகிச் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லங்கா சமசமாஜக் கட்சியின் செயற்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையில் கட்சித் தலைமையகத்தில் கூடியபோது, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
உத்தர லங்கா கூட்டமைப்பு சோசலிச பயணத்தை மேற்கொள்ளாமல் தென்னிலங்கையின் முதலாளித்துவ அமைப்பை நோக்கி நகர்வதால் கூட்டணியிலிருந்து விலக தீர்மானித்துள்ளது.
உத்தர லங்கா கூட்டமைப்பு என்பது நாட்டில் இயங்கும் இடதுசாரி கட்சிகள் உட்பட ஏழு கட்சிகளால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஜனநாயக இடதுசாரி முன்னணி, லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, விஜய தரணி தேசிய பேரவை மற்றும் துடுகம தேசிய அமைப்பு ஆகியவை இணைந்த அமைப்பாகும்.
இந்த கூட்டணியைச் சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். கடந்த வருடம் (2022) செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி உத்தர லங்கா கூட்டமைப்பின் முதலாவது மாநாடு நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலியே ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸ விதாரண, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட 32 பேர் உத்தர லங்கா கூட்டமைப்பின் தேசிய நிறைவேற்று சபையில் செயற்படுகின்றனர்.