
ரணில் மட்டுமல்ல நாமும் அப்போது இருக்க மாட்டோம்
எதிர்வரும் 2048 ஆம் ஆண்டு வரை திட்டங்களை வகுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறிய போதிலும் 2048 ஆம் ஆண்டில் அவர் மட்டுமல்லாது தற்போது இருக்கும் நம்மில் எவரும் உயிருடன் இருக்க மாட்டார்கள் என ஐக்கிய குடியரசு கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மதுளுவாவே சோபித தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
நாட்டின் அபிவிருத்தி என்பது அடுத்த ஜென்மத்தில் புண்ணியம் கிடைக்க செய்வது போன்று செய்யும் காரியமல்ல. நாடு ஒன்றின் அபிவிருத்தி என்பது இப்படியான செயற்பாடு அல்ல.
ஐக்கிய குடியரசு முன்னணியிடம் மூன்று வருடங்களில் நாட்டை முன்னேற்ற தேவையான வேலைத்திட்டங்கள் உள்ளன.
இதற்கு தேவையான அனுபவமும் செயலும் கொண்ட இளம் அணி எங்களிடம் உள்ளது.
நாட்டை வங்குரோத்து அடைய செய்தவர்கள் எவரும் அதற்கான பொறுப்பை ஏற்று நாட்டிடம் மன்னிப்பு கோரவில்லை
குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர பௌத்த சமயத்தின் உணர்வுகளை விற்றவர்கள் இருந்தனர்.
மக்களை ஏமாற்றும் ஒரு தேசியவாத திட்டத்தை வழிநடத்தியவர்களாவே நாங்கள் பார்ககின்றோம்.
அவர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில் மீண்டும் அந்த கொடூர குற்றத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
நாட்டில் வாழும் 50 லட்சம் குடும்பங்களை அவர்கள் மறந்து விடுகின்றனர்.
இந்த 50 லட்சம் குடும்பங்களில் 76 வீதமாக குடும்பங்கள் சிங்கள பௌத்த குடும்பங்கள். 70 வீதமாக பௌத்த மக்கள்.
நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டு சென்று மக்களை வீதியில் தள்ளியமைக்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர்கள் மீண்டும் மத உணர்வுகளை பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
அதேபோல் இந்தியாவில் பொதுத் தேர்தல்அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்காக இதே போன்ற மத விவகாரங்கள் தூண்டப்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது.
கருத்து சுதந்திர்தை அடிப்படை மனித உரிமைக்கு அமைய மேற்கொள்ள வேண்டும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளார்.