
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இணையத்தளம் வழியாக கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்
வெளிநாடுகளில் உ ள்ள இலங்கையர்கள் புதிய கடவுச்சீட்டை பெறவும் கடவுச்சீட்டை புதுப்பிக்கவும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் இணையத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என சர்வதேச உறவுகள் தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் அந்நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களுக்கு செல்லாது, இணையத்தளம் வழியாக கடவுச்சீட்டை பெறுவதற்காக விண்ணப்பங்களை செய்ய முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சர்வதேச உறவுகள் தொடர்பான நாடாளுமன்ற கண்காணிப்பு தெரிவுக்கு அதன் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையில் அண்மையில் கூடியது.
இதன் போது இலத்திரனியல் கடவுச்சீட்டை நடைமுறைக்கு கொண்டு வருவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இணையத்தளம் வழியாக விசா விண்ணப்பங்களை செய்யும் போது காணப்படும் குறைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
வெளிநாட்டவர்கள் சிரமங்கள் இன்றி விசாவை பெற்றுக்கொள்வதற்கு தேவையான பொறிமுறையை உடனடியாக உருவாக்குமாறும் வெளிநாட்டவர்களுக்காக இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களின் வசதிகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நாமல் ராஜபக்ச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.