
புலிகளும்,இராணுவமும் ஒன்றென்றா அரசு கூறுகிறது; ‘நினைவுத் தூபி’க்கு சரத் வீரசேகர கடும் எதிர்ப்பு
யுத்தத்தில் உயிரிழந்த படையினர்,புலிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூரும் வகையில் ‘நினைவுத் தூபி’ஒன்றை அமைக்க அமைச்சரவை வழங்கிய அங்கீகாரத்தை நல்லிணக்கம் என்று கூறக் கூடாது. இதற்குப்பெயர் கோழைத்தனம்.அரசின் இந்த செயல் பெரும் வெட்கக்கேடு என முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரும் அரச தரப்பு எம்.பி.யுமான ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அரசைக் கடுமையாகச் சாடினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பந்தயம்,சூதாட்ட விதிப்பனவு திருத்தச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் ‘நினைவுத் தூபி’ஒன்றை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.இதனை நல்லிணக்கம் என்று கூறக் கூடாது.இதற்குப்பெயர் கோழைத்தனம்.
நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப் படையினரையும், பயங்கரவாதிகளான விடுதலை புலிகளையும் எவ்வாறு சம நிலையில் பார்க்க முடியும்.நாட்டில் அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே முப்படையினர் போராடினார்கள்.விடுதலை புலிகள் நாட்டைப் பிரிக்க போராடினார்கள்.
முப்படையினரையும்,விடுதலை புலிகளையும் சமநிலையில் வைத்துப் பார்க்க அரசு எடுத்துள்ள தீர்மானம் வெட்கக்கேடானது. அரசின் இந்த செயலால் வெட்கமடைகிறேன்.ஆகவே நினைவுத் தூபி அமைக்கும் தீர்மானத்தை அரசு திருத்திக் கொள்ள வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தில் சியாம் நிகாய மத வழிபாட்டுக்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமின்றி தடையேற்படுத்துவார் களாயின் பாரிய அழிவு ஏற்படும் என்று நான் தெரிவித்த கருத்தின் நோக்கத்தை அறியாமல் ரவூப் ஹக்கீம் எம்.பி. தெரிவித்த கருத்துக்களையிட்டு கவலையடைகிறேன் என்றார்

