
நாட்டுக்கு வர வேண்டிய டொலர்கள் வெளிநாடுகளிலேயே பதுக்கி வைப்பு
ஏற்றுமதியின் போது நாட்டில் இருந்து 10 ஆயிரம் டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பினால் 240 டொலர்கள் மாத்திரமே நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றது என்றும், நாட்டுக்கு வர வேண்டிய டொலர்கள் வெளிநாடுகளிலேயே பதுக்கி வைக்கப்பட்டுவிடுவதாகவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பந்தய சூதாட்ட விதிப்பனவு ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுங்க திணைக்களத்தின் ஊடாக இறக்குமதி, ஏற்றுமதியின் போது பாரதூரமான செயற்பாடுகள் நடக்கின்றன. கடந்த வருடம் ஜுலை மாதத்தில் மத்திய வங்கியினால் ஏற்றுமதியாளர்கள் தொடர்பில் ஆராய்ந்தது. அதன்போது 10 ஆயிரம் டொலர்களை வெளிநாட்டுக்கு அனுப்பும் போது 240 டொலர்கள் மாத்திரமே நாட்டுக்கு கொண்டு வரப்படுகின்றது. மிகுதி டொலர்கள் ஏற்றுமதியாளர்கள் வெளிநாடுகளில் நிறுத்தி வைத்திருக்கின்றனர். சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நிறுவனங்களை நடத்தி அதில் வைத்திருக்கின்றனர். இதனால் ஏற்றுமதியில் கிடைக்கும் வருமானம் குறைவாகும். மாயையான பொருளாதாரத்திலேயே நாங்கள் இருகின்றோம். இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்துவதற்காக முறைகள் இந்த சுங்க திணைக்களத்திடம் இல்லாது இருக்கின்றது. இதனால் இந்த நிறுவனத்தை நவீன மயப்படுத்தி, டிஜிட்டல் மயப்படுத்த வேண்டும். அதனை செய்யாமையே பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது என்றார்.

