இன்னும் இது போல எத்தனையோ……..

இன்னும் இது போல எத்தனையோ……..

 - அஜந்தி -

“வழுதி! என்ரை செல்லம்…!ஐயோ…!என்ரை ராசா.!”
கேட்பவர்களின் உணர்வுகளை அசைத்து உலுக்குவதாய் அழுகையினூடு கொஞ்சம் கொஞ்சமாய்த் துவங்கி அவளுடை உருக்கம் நிறைந்த கதறல் அந்த மருத்துவமனையே அதிரும்படி “வழுதி…!வழுதி…!” என்று உச்சம் தொட்ட போது, கொஞ்சம் கொஞ்சமாய் உணர்விழந்து அவள் மயங்கி சாய்ந்தாள்.
“இப்படித்தான் டொக்டர் அடிக்கடி நடக்குது, ஒருத்தரையும் அக்காக்கு நினைவில்லை எல்லாமே மறந்துட்டா.
அது கூட பரவாயில்லை தான்பெற்ற மகளைக் கூட அவளுக்கு நினைவில்லை, தெரிவதுமில்லை”
“oh…I…see.. it’s very pathetic… மகளுக்கு இப்ப எத்தனை வயசு?”
“பதின்மூன்று வயசாகுது…தாயின்ரை அரவணைப்பு தெரியாமலே அந்தப் பிள்ளை வனர்ந்திட்டுது…ரெண்டு பேரையும் இங்கை இலண்டனுக்கு எடுத்து ஒன்பது வருசமாகிப்போச்சு….அக்காவைக் காட்டாத இடமேயில்லை… ….இப்பிடியே தான் இருக்கிறா….அப்பதான் என்னோட வேலைசெய்யுற நண்பன் உங்களைப்பற்றிச் சொன்னான்…. என்ரை அக்காவை எப்படியாவது சுகப்படுத்துவீங்கள் எண்ட நம்பிக்கையோடை உங்களிட்டை வந்திருக்கிறன் டொக்டர்”
கையெடுத்து கும்பிட்டபடி முன்னால் நின்ற ரூபனிடம் அவர் சொன்னார்,
“பன்ரெண்டு வருசம் போய்ட்டுது….. இனி…..chances are rare. Anyway we’ll try our best to cure the problem”
“அதுக்கு முதல், உங்கடை அக்காக்கு
இப்பிடி ஒரு மன நோய் எப்பிடி? ஏன்? ஏற்பட்டது என்ற பின்னணி தெரிய வேணும்…. என்ன மாதிரியான treatment மூலமா இந்தப் பிரச்சினையை சரி செய்யலாம் எண்டு decide பண்ண அது help பண்ணும்”
“சொல்லுறன் டொக்டர்…2009 சண்டையிலை வன்னிக்குள்ளை எங்கட சனம் பட்ட கொடுமையையளும் அவையள் ஆயிரக்கணக்கிலை செத்துப் போன கதையும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் தானே…”
“ஓம் சொல்லுங்கோ”
“என்ரை அக்காவும் அத்தானும் ரெண்டு பிள்ளைகளும் வன்னியிலை தான் இருந்தவை… அத்தான் ஒரு போராளி. அக்காவும் அவரும் ஒருவரை ஒருவர் விரும்பி கல்யாணம் செய்தவை”

                     *             *           *          *     *

எங்கென்றில்லாமல் எறிகணைகளும், விமானக்குண்டுகளும் விழுந்து வெடித்ததில் வன்னிப் பிரதேசம் அதிர்ந்து கொண்டிருந்தது. பயத்திலும்,ஆற்றாமையிலும் பீறீட்ட கூக்குரல்கள் வான் தொட்டுக் கரைந்து போயின. ஓடுவதா? ஓடாமல் நிற்பதா? எது பாதுகாப்பு? எங்கே பாதுகாப்பு? தெரியவில்லை.
ஆனாலும் ஓடினார்கள். வஞ்சிக்கப்பட்ட ஒரு இனத்தின் அபலைகளாய்
உயிர்காக்கும் பரிதவிப்புடன் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார்கள்..
இருந்த ஓரே ஒரு வழி அந்த ஓடுதல் மட்டுமே. எந்த இலக்குமில்லாத ஓட்டம்! உயிர்களை பாதுகாக்கும் ஒரு நப்பாசை.;குண்டடிபட்டு விழுந்து கிடந்த உடல்களை ஏறிமிதித்து ஓட நேர்ந்த போதும் ஓடுதல் நிற்கவில்லை.;அதிகம் ஏன்? கூட வந்த உறவுகள் குற்றுயிராக வீழ்ந்த நிலைகண்டும் – அது மிக நெருங்கிய உறவாக இருந்த போதும்-விநாடிப்பொழுது தாமதித்து ,ஒரு துளி விழிநீர் சிந்தி காணிக்கை
செலுத்த முடியாத சாபப்பட்ட மக்கள் கூட்டத்தின் ஓடுதல் ஓயவில்லை. தொடர்ச்சியான குண்டுவீச்சுகளின் காரணமாக ,பதுங்கு குழிகளும் கொஞ்சம் கொஞ்சமாய் பயனின்றிப் போய்க் கொண்டிருந்தன.
கமலினி என்ன செய்வாள்? விடுதலைக்கு சாசனம் எழுதிக் களமாடிக் கொண்டிருந்த கணவன் உயிரோடிருக்கிறாரா இல்லையா என்றெண்ணித் துடிப்பாளா? பயத்தில் உடல் நடுங்க அழுதபடி தன் கால்களை இறுக கட்டிப்பிடித்து நிற்கும் ஆறுவயசுப் பையன் வழுதியைத் தேற்றுவாளா? அல்லது இடுப்பிலிருக்கும் ஒன்பது மாதக் குழந்தை ஆதிரையின் பசி அழுகை போக்க வழி செய்வாளா?
எறிகணை அதிர்வுகள் ஏற்படுத்திய பீதியில் அயலவர்கள் எல்லாம் வெளியேறிப் போய் வெகு நேரமாகி விட்டது. நேரம் பிற்பகல் இரண்டு மணியைத் தாண்டியிருந்தது
“எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் என்னையும்
பிள்ளைகளையும் பாக்க- ஏதாவது வழி சொல்ல- ஓடி வாறவர்
இப்பவும் வருவார் ” என்ற அவளுடைய நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து முற்றாக இல்லாமல் போனது. அதுவரைக்கும் வராத கணவன் இனியும் வரப்போவதில்லை என்ற யதார்த்தம் நெஞ்சைப்
பாரமாய் அழுத்தியது.
“அம்மாளாச்சீ!!… ….. அவரைக் காப்பாத்தம்மா…!”
மேலும் உக்கிரமடைந்த எறிகணை வீச்சுக்களினால் அதிர்வும், புகை மண்டலமும் மேலும் ஒரு விநாடிப் பொழுது கூட அந்த இடத்தில் நிற்க கூடாது என்ற ஆபத்தான உண்மையைப் புரிய வைத்தன.
கைவசமிருந்த இரண்டு பிஸ்கட் பொட்டலங்களில் ஒன்றைப் பிரித்து பிள்ளைகளின் கையில் ஆளுக்கொன்றாய் கொடுத்து, மீதியைப் பையில் போட்டு, இரண்டு போத்தல்களிலும் தண்ணீர் நிரப்பி எடுத்து,கையில் பையனைப் பிடித்த படி ஓடத் துவங்கினாள். ஓட்டத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத பையன் ஓ…..!! வென்று சத்தமாகக் கத்திக் கூக்குரலிட்டபடி இழுபட்டு ஓடிக்கொண்டிருந்தான். இடுப்புக் குழந்தை அதற்கு மேலாக வீரிட்டது. அவர்கள் ஓடிக்கொண்டிருந்த சில தூர இடைவெளிக்குள்ளாக முன்னும், பின்னும், பக்கங்களிலும், நிலம் அதிர்ந்து குலுங்கி கொண்டிருக்க பொழுது சாயத் தொடங்கியது. பாதையை மறைத்து புகைமண்டலம் சூழ்ந்திருந்தது.களைப்பு மேலிட, அடுத்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல், நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள். பாதையோரம் ஒரு வீடு தெரிய…
“யார் வீடாய் இருந்தாலென்ன… கொஞ்ச நேரம் களைப்பாறலாம்” என்று
அங்கே போன போது வீடு திறந்த படி இருந்தது உள்ளே யாருமில்லை.
“அவர்களும் எங்கேயாவது ஓடியிருப்பார்கள்….”
வீட்டின் முன்புறமாக தரையில் உட்கார்ந்து பிள்ளைகளுக்கு பிஸ்கட்டும் தண்ணீரும் கொடுத்து,கமலினியும் தண்ணீர் குடித்தாள்.
கொஞ்சம் ஓய்ந்திருந்த எறிகணைகளின் ‘உய்ங்களும்’ முன்னைவிட பலமடங்கு வீச்சுடன் மறுபடியும் தொடங்கியது. பயத்தில் குழந்தை அழத்துவங்க, வழுதி ஓ…..!! என்று குரலெடுத்துக் கத்தினான்.
“அம்மா……எனக்கு பயமாயிருக்கம்மா!…அப்பா வருவாராம்மா? அப்பா எங்கை?”
என்ன செய்வாள் அவள்?
“கடவுளே! ஏன் இப்படி எல்லாம் நடக்குது? இந்தக்
குழந்தையளின்ரை அழுகை கூட உனக்கு கேக்கேல்லையா ?….”
வேதனையின் உச்சத்தில்,பொங்கி வந்த அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் கமலினி பெருங்குரலெடுத்துக் கதறி அழத் துவங்கினாள்.
“ஆண்டவா!… நான் என்ன செய்வன்? எங்கை போவன்? இந்த பிள்ளையளைக் காப்பாத்த ஒரு வழி சொல்லையா! கடவுளே !!!”
வீட்டின் பின் பக்கமிருந்து ஒரு பெண் குரல் சத்தமாய் கத்தி “அங்கை ஆர் நிக்கிறியள்?…. ஷெல்லுகள் வந்து கொண்டிருக்கு, இங்கை ஓடி வாங்கோ. பங்கருக்குள்ளை இருக்கலாம் …உடனே வாங்கோ….”
விநாடி தாமதமும் இல்லாமல் கமலினி எழுந்து “ஓடி.. வாடா…” என்று மகனிடம் சொல்லி வீட்டின் பின்பக்கம் நோக்கி ஓடத் துவங்க கூவிக் கொண்டு வந்த எறிகணையொன்று வீதிக்கருகில் விழுந்து வெடித்துச் சிதறியது.
“ஐயோ…! அம்மா” என்று வழுதி அவளின் பின்னால் ஓடவும், எறிகணை சிதறல் ஒன்று இடுப்பில் பாய்ந்து, அவனைத் தூக்கி ஏறியவும் சரியாய் இருந்தது.
இரத்தம் வழிந்தோட, நிலத்தில் கிடந்து துடித்துக் கொண்டு இருந்தவனுக்கு அருகே ஓடிய கமலினி தான் பெற்றவனுக்கு
இடுப்புக்குக் கீழே இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டிருந்த கொடுமையைக் கண்டாள். தன் தலையே பிளந்து சிதறிப் போனதான உணர்வில் உயிர் வலிக்க பெருங்குரலெடுத்து….
“வழுதீ….!என்ரை ராசா….!!! ….!ஐயோ…! என்ரை செல்லமே…!” என்று உயிர் துடித்துக் கத்தினாள்.
“ஐயோ! கடவுளே….! என்ரை பிள்ளைக்கு என்ன நடந்தது…..! வழுதீ… வழுதீ…என்னைப் பாரடா….அம்மா வந்திருக்கிறன்ரா…..!”
“என்ன நடந்தது? “
மீண்டும் பங்கருக்குள் இருந்து அந்தப் பெண் குரல் பெரிதாய்க் கேட்டது.
என்ன சொல்லுவாள் இவள்? அல்லது என்ன செய்வாள்? அடி வயிற்றிலிருந்து கிளம்பிய பெரு நெருப்பில் அந்த தாய்
துடியாய் துடித்தாள். தூக்கிச் சுமந்தோடிப் போய் சிகிச்சை செய்யும் சூழலுமில்லை.
இரத்த வெள்ளத்தில் உயிர் துடித்துக் கொண்டிருந்த
பிள்ளை…… இடுப்பிலிருந்து தொடர்ந்து வீரிட்டழுது கொண்டிருந்தது மற்றப் பிள்ளை…… தொடர்ச்சியாக விழுந்து வெடித்துக் கொண்டிருந்த
எறிகணைகள். அந்தப் பிள்ளைக்காக அழுவாளா? இந்த பிள்ளையைக் காப்பாற்ற பங்கருக்குள் ஓடுவாளா.?
‘நடக்கிறது நடக்கட்டும்’
குழந்தையை அணைத்தபடி உட்கார்ந்தாள். கண்கள் சொருகி இறுதி நிமிடங்களில் கிடந்த மகனின் தலைதடவி “வழுதீ…!அம்மா இருக்கிறன்ரா..
ஒண்டும் பயமில்லை கண்ணா!……அம்மா இருக்கிறன்ரா……”
குலுங்கிக் குலுங்கி அழுதாள்.
“நாங்களும் உன்னோடை வாறம், பயப்பிடாதை செல்லம்….”
எறிகணைகளில் ஒன்று தங்கள் மீது விழட்டும் என்ற தீர்மானத்துடன் இருந்த போதும், வீழ்ந்து வெடித்த எறிகணைகளில் ஒன்று கூட சில நிமிடங்கள் கூட அந்த இடத்துக்கு வரவில்லை.

குழந்தை மறுபடி வீச்செடுத்து அழத் துவங்கியது. அப்போதுதான் மிக அருகில் வந்து நின்ற ஒரு உருவம் கமலினியின் கையைப் பிடித்து தூக்கி இழுத்து எழும்ப வைத்தது.
“எழும்பு பிள்ளை….. ஷெல்லுகள் வந்து கொண்டிருக்கு….முதல்ல
வா..பங்கருக்கை போவம். பிறகு…. எல்லாம்…பார்ப்பம்…”
இவர்களை பங்கருக்குள் வரும்படி முதலில் குரல் கொடுத்த
அதே பெண்தான்!
“ஐயோ ..! என்ரை பிள்ளை….!” நிலத்தில் குற்றுயிராய்க் கிடந்து துடித்துக் கொண்டிருந்த பிள்ளையைக் காட்டி அவள் ‘ஓ….’ வென்று கத்தினாள்.
“அப்ப? இதுகும் உன்ரை பிள்ளைதானே….? இதையாவது காப்பாத்தப் போறியா அல்லது இதையும் பறிகுடுக்கப் போறியா? வா என்னோடை” என்று சற்று கடுமையான குரலில் சொல்லிக் கொண்டிருக்க- மீண்டும் ஒரு எறிகணைக்கூவல். அவசர அவசரமாய் ஓடி பங்கருக்குள் இறங்கிய போது, எங்கோ மிக அருகில் வெடித்த குண்டின் அதிர்வை உணர முடிந்தது.
இரவு முழுக்க தொடர்ந்து எறிகணை வீச்சுக்கள், மறுநாள் விடிந்தவுடன் தொடங்கிய விமானக் குண்டு வீச்சுக்கள். எல்லாம் ஓய்ந்த போது காலை மணி பத்தரைக்கு மேல் ஆகியிருந்தது. கமலினி பங்கரை விட்டு வெளியே ஓடினாள். அடுத்த நிமிடம்
“வழுதீ ….!வழுதீ ….’ ஐயோ….!என்ரை ராசா….!”
பங்கருக்குள் இருந்தவர்களின் உயிர்களை உலுக்கி எடுத்த வலி மிகுந்த ஒரு தாயின் கதறல்! எல்லோரும் வெளியே ஓடினார்கள். அங்கே இறுகிப் போய்விட்ட இரத்தவிரிப்பில், உயிர் பிரிந்து கிடந்தவரின்
உடலெங்கும் எறும்புகள் ஊர்ந்தபடி இருக்க, மெல்லிய முணுமுணுப்புடன்
இலையான்களின் கூட்டம் மொய்ப்பதும் விலகுவதுமாய் பறந்து
கொண்டிருந்தன.
அப்போது மயங்கி சாய்ந்த கமலினி அதன் பிறகு புத்தி பேதலித்து
மனநோயாளியாக மாறிப் போனாள்.

                      *          *              *                *

“இது தான் டொக்டர் நடந்தது…அக்காவையும் குழந்தையாய் இருந்த ஆதிரையையும் வவுனியா அகதி முகாமிலை நான் பொறுப்பு எடுக்கிறவரைக்கும். அந்தக் குடும்பந்தான் தங்கடை கஷ்டத்தையும் பாக்காமல் இவைக்கு துணையாய் இருந்தது. அந்தக் குடும்பத்துக்கு என்ரை வாழ்க்கை முழுக்க நான் நன்றியோடை இருக்க வேணும்.” அன்று மாலை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய ஆதிரை ரூபனிடம் கேட்டாள்.
“மாமா…..!அம்மாவை பாத்த பிறகு டொக்டர் என்ன சொன்னவர்?”
“பன்னெண்டு வருசமா மாறாம இப்படியே இருக்கிறபடியா கொஞ்சம் கஷ்டம்தான் என்று சொன்னார்… ஆனா….”
“ஆனா …என்ன மாமா?” ஆதிரையின் குரலில் ஏக்கமும், ஆதங்கமும் தெரிந்தது.
“இந்த மாதிரி ஒரு மனநோய் எப்பிடி வந்தது…? அவவின்ரை மனதைப் பாதிச்ச ஏதோ பெரிய விசயம் தான் இதுக்கு காரணமாயிருக்கும்…
அது என்ன எண்டு தெரிஞ்சால், அதுக்குரிய மாதிரி என்ன செய்யலாம் எண்டு பாக்கலாம் எண்டு டொக்டர் சொன்னார்:”
“அப்ப நீங்க என்ன சொன்னீங்க மாமா?”
“இதுக்கும் அந்த சாரதா ஆன்டிக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேணும்…. ….அண்டைக்கு இரவிரவாய் பங்கருக்குள்ளை இருந்து
அழுதபடியே ஒண்டும் விடாமல் எல்லாக் கதையும், உன்ரை அம்மா
அந்த ஆன்டிக்கு சொல்லியிருக்கிறா.””
“,,,,,,ஓ… “
” நல்ல தமிழில் பேருகள் வைக்க வேணுமென்று உங்கள் ரெண்டு பேருக்கும் அப்பா தான் பேர் வைச்சவர் எண்டது தொடக்கம் …சந்தோசமா வாழ்ந்த காலங்கள்…சண்டையில் நின்ற உன்ரை அப்பா ஒருக்கா என்றாலும் வருவாரெண்டு பாத்துப் பாத்து கடைசி நிமிசம் வரைக்கும் நிண்டது…அதுக்கு பிறகு ஷெல் அடிக்கை நிற்க முடியாமல் வெளிக்கிட்டு ஓடி வந்தது. ரெண்டு காலும் வெட்டப்பட்டு உன்ரை அண்ணா இரத்தப் பெருக்கில் கிடந்தது. கதறிக் கதறி அழுது உன்ரை அம்மா சொன்ன எல்லாக் கதையும் அந்த ஆன்டிதான் எனக்கும் சொன்னா…”
” …………………………” எதுவுமே பேசாமல் கண்ணீர் வழிந்தோடியபடி நின்ற ஆதிரை சிறிது நேரம் கழிய ரூபனிடம்
“பங்கருக்கை இருந்து அழுதழுது எல்லாக் கதையும் சொல்லேக்கை
அம்மா நல்ல நினைவோடைதானே மாமா இருந்திருக்கிறா…? பிறகு ஏன் இப்பிடி வந்தது….? ஒரு வேளை அதையே யோசிச்சு யோசிச்சு மனம்
பாதிக்கப் பட்டிருக்குமோ?”
‘ஆருமில்லாது அனாதைபோலை, தான் பெத்தவன் நிலத்திலை
கிடந்த கோலமும், துர்வாடை வீசிக் கொண்டிருந்த அந்த உடம்பிலை
எறும்புகளும், இலையான்களும் மொய்த்துக் கொண்டிருந்த நெஞ்சு வெடிக்கும் கொடூரக் காட்சியுங் கண்டு தாங்க முடியாமல், கதறிக் கொண்டு மயங்கி விழுந்த உன்ரை அம்மா அதுக்கு பிறகு தான் இந்த மீளாத மனநோய்க்கு ஆளாகிப் போனா எண்ட கதையை உன்னட்டை நான் எப்பிடிச் சொல்லுவன் ஆதிரை? வேண்டாம் அந்த கொடுமையை நீ அறிய வேண்டாம்.’
“அது தானடா எனக்கும் விளங்கல்லே …பாப்பம், டொக்டரிட்டை எல்லாம்
விளக்கமாய் சொல்லியிருக்கிறன்…..சுகப்படுத்தி விடுவார் என்ற நம்பிக்கையோட இருப்பம்”

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )