
சீனப் பொறிக்குள் சுழலும் சீலங்கா
-கார்த்திகை-
எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் – சமூக ஆர்வலர்களின் கடுமையான, 19 இற்கும் மேற்பட்ட மனுக்களையும், சிங்கள மக்களின் விசனங்களையும் புறந்தள்ளி, உட்பிரிவுகளில் செய்யப்பட்ட சில சிறிய மாற்றங்களுடன், இலங்கையின் சிறப்புப் பொருளாதார மண்டலமான ‘துறைமுக நகர்’ ( Port City ) இற்கான மசோதா நாடாளுமன்றில் பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 149 இற்கு 58 என்ற பெரும்பான்மையுடன் நிறைவேறிய இந்த மசோதா, அலங்கார வார்த்தைகளால் சிங்களர்கள் திருப்திப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்பதையும், சீன முதலையின் வாய்க்குள் சிங்கத்தின் தலை வசமாகச் சிக்கிவிட்டது என்பதையும் உறுதி செய்கிறது.
பல பில்லியன் டாலர்களை சீனாவிடம் கடனாகப் பெற்று, சீனக் கட்டுமானக் கம்பனியின் துணையுடன் இந்த 665 ஏக்கர் மீட்கப்பட்ட நிலம் துறைமுக நகராகின்றது. இதற்காக, கிட்டத்தட்ட 121 ஏக்கர் நிலத்தினை இலவசமாக ( free hold ) சீனாவுக்கு கொடுப்பதாக 2014 இல் மகிந்த ராஜபக்சவினால் எழுதப்பட்ட ஒப்பந்த நிலையை மாற்றி, 153 ஏக்கர் நிலப்பரப்பை 99 ஆண்டுகாலத்திற்கு சீனாவிற்குக் குத்தகைக்கு விடுவதான புதிய தீர்மானம் சிங்களர்களைத் திருப்திப்படுத்தியிருக்கக் கூடும். ஏற்கனவே, தன் மூதாதையர் வாழ்ந்த நிலமான அம்பாந்தோட்டையை வளமாக்கி சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதற்காக என்று, ஏற்கனவே இருந்த 4.5 பில்லியன் கடன் பழுவையும் மீறி சீனாவிடம் கடன் பட்டது ராஜபக்ச குடும்பம். அந்தக் கடனை மீளச் செலுத்தமுடியாத நிலையில், 2017 இல் அம்பாந்தோட்ட துறைமுகத்தை 99 வருட கால குத்தகைக்கு சீனாவிடம் கையளித்திருக்கிறார்கள். புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அம்பாந்தோட்ட விமான நிலையம் நாளொன்றுக்கு ஒரேயொரு விமானத்தை மட்டுமே இறக்குவதும், விஸ்தரிக்கப்பட்ட அம்பாந்தோட்ட வைத்தியசாலை சீன தொழிலாளிகளின் தங்குமிடமாக மட்டுமே மாறியிருப்பதும் வளப்படுத்தலின் விளைவுகளை வெளிச்சம் போடுகின்றன. குத்தகைப் பணம் 1.4 பில்லியன் இவ்வாறு மாயமாகிப் போக, கடன் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இப்போது மீண்டும் பல பில்லியன்களுக்கு சீனாவிடம் கையேந்தி கடனாளியாகின்றது இலங்கை.
ஏற்கனவே, சீனாவின் ‘கடன் பொறி இராசதந்திரம்’ உலகின் முக்கியமான பேசுபொருளாகவுள்ளது. பலம் பொருந்திய நாடுகள் என்று சொல்லப்படுபவை இதனைக் கவலையுடன் அவதானிக்கிறார்கள். சர்வதேச நாணய நிதி நிறுவனமோ இத ஒரு ‘கொள்ளையடிக்கும் கடன்’ என விமர்சிக்கிறது. கென்யா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, சாம்பியா, ஜிபுட்டி, காங்கோ, எகிப்து, ஆர்ஜென்ரீனா, ஈக்வடார், வெனிசுவெலா என்று 8 நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கி மீளமுடியாதிருக்கின்றன. அதிலும் பிரதானமாக, ஜிபுட்டியில், சீனாவினுடைய முதலாவது வெளிநாட்டு இராணுவத்தளம் அமைக்கப் பட்டிருப்பதிலிருந்து கடன் பொறியின் ஆபத்து உணரப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் சீனாவிடம் பெற்ற கடனை மீளளிக்க முடியாமல் அது சர்வதேச நாணய நிதி நிறுவனத்தை நாடியதும், அது தொடர்பாக வாஷிங்டனின் செல்வாக்கில் இன்றுவரை பாக்கிஸ்தான் இருப்பதும் விளைவுகளின் பாரதூரத் தன்மைக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு.
துறைமுக நகரினால் தமிழர்களுக்கு நன்மை ஏதும் விளையப் போவதில்லை. பல இலட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள், வணிகம், மற்றுமொரு துபாய் – சிங்கப்பூர் என்ற அலங்கார வார்தைகளுக்கு அப்பால், தமது இறையாண்மைக்கு ஆப்பு வைக்கப்பட்டிருப்பதை சிங்கள மக்கள் உணரத்தான் போகிறார்கள். திருப்திப்படுத்துவதற்காக கொடுக்கப்பட்ட சிறிய சலுகையையும் மீறி, மீனவர்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்ததை உணர்வார்கள். சூழல் மாசு தவிர்க்க முடியாததாகும். பனிப்போர் காலத்தில் இலங்கை – அமெரிக்கக் கூட்டு இந்தியாவை எப்படி தமிழ் ஆயுதக்குழுக்களின் தோற்றுவாய்க்கும் வளர்ச்சிக்கும் துணைபோக வைத்ததோ அதே நிலைக்கு அரசு மீண்டும் தன்னைத் தள்ளியுள்ளது என்ற எச்சரிக்கையும், மீண்டும் புவிசார் – அரசியல் ஒழுங்கைப் பேணி அதனது பாதுகாப்பை உறுதிசெய்ய இந்தியா எந்த நிலையும் எடுக்கக்கூடும் என்ற ஐயப்பாடும் எழுப்பப்பட்டுள்ளது. எதிர்வினையாற்ற வேண்டிய இந்தியா தற்காலிக மௌனம் சாதிக்கிறது. ஜெய்சங்கரின் அமெரிக்க பயணம் இதற்கான எதிர்வினையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த நிலையில், விடுதலைப் போராட்ட காலத்தில் தலைவர் பிரபாகரனின் கட்டுக்கோப்பான வழிநடத்தல் அந்நிய அத்துமீறலை முற்றாகத் தடுத்து நிறுத்தியிருந்ததும், விடுதலைப் போராட்ட காலத்தில் எந்தவொரு நாட்டினாலும் சிங்கள இறைமையைக் கூட சிதைக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.
இதனை தெளிவாக உணர்ந்திருந்ததால் தான் அப்போதைய பிரதமர் பிரேமதாச தமிழர்களுடன் இணைந்து இந்திய ஆக்கிரமிப்பை எதிர்த்திருந்தார். இன்று, தமிழர்களை ஒடுக்கிவிட்டதாக மார்தட்டும் சிங்கள ஆளும் வர்க்கம் தமது இறைமையை அடகு வைத்து, ராஜபக்சக்களின் சட்டைப்பையை நிரப்பிக் கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்வார்களா சிங்களவர்கள்?