
பவம் பவானி சகிதம் நமாமி
அஜந்தி-
“கற்பூர கௌரம் கருணாவதாரம்
சம்சார சாரம் புஜகேந்திர வதாரம்
சதா வசந்தம் ஹ்ருதயாரவிந்தே
பவம் பவானி சகிதம் நமாமி”
கண் மூடி நின்று மனமுருகிப் பாடிய பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நிற்கிறாள் அந்தப் பத்து வயதுச் சிறுமி. ஒவ்வொரு வெள்ளியன்றும் இந்தச் சிவன் கோவிலுக்கு அம்மாவுடன் வந்து கொண்டிருக்கும் இவள், கடந்த அசல் வாரங்களாகப் பூசை நேரங்களில் அந்தப் பெரியவரைப் பார்த்திருக்கிறாள். தேவாரங்கள் பாடி பக்தியோடு அவர் செய்கின்ற பிரார்த்தனையைக் கண்டு தன்னையறியாமலேயே அந்தப் பெரியவரிடம் அவளுக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. ‘தாத்தா’ என்று அவரைக் கூப்பிட்டு ஏதாவது பேச வேண்டும் என்ற ஒரு ஆவல்கூட மனசுக்குள் தோன்றியிருந்தது.
பூசை முடித்து, தீபம் காட்டி ஐயர் எல்லோருக்கும் விபூதிப் பிரசாதம் கொடுக்க, தீபத்தைத் தொட்டுக் கும்பிட்டு விபூதி அணிந்து கொள்கிறார்கள்.உள் பிரகாரத்தைச் சுற்றி வருவதற்காகப் போன அம்மாவுடன் சேர்ந்து போகாமல், தாத்தாவுடன் பேசிவிடும் முனைப்பில் நின்ற சிறுமி பெரியவருக்கருகில் போகிறாள்.
“தாத்தா!” தூணருகில் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்தவர் கண் திறந்து பார்க்கிறார்.
“நீயா என்னைத் தாத்தா எண்டு கூப்பிட்டாய்? என்னம்மா?”
“சும்மா….. உங்களோடை கதைக்க…..”
பெரியவர் வாய்விட்டுச் சிரிக்கிறார். முகத்தில் மகிழ்ச்சியின் ரேகைகள்.
“என்னோடையா…? என்ன கதைக்க வேணும்…? சொல்லு…..”
“இல்லை தாத்தா….. கொஞ்ச நேரம் முதல்லை நீங்க பாடின பாட்டை இப்பவும் ஒருக்கா பாடுவீங்களா?”
“தேவாரம்…. திருவாசகம்….. எல்லாம் பாடினன்…. அதிலை எந்தப் பாட்டு?”
“கற்பூர கௌரம்…..”
“ஓ…. அது பாட்டில்லை ராசா……மத்திரம்……சிவபெருமான்ரை மந்திரம்…. இதோ…. உனக்காக….”
பெரியவர் கண்கள் மூடிப் பரவசமாக இசையுடன் சேர்த்து அந்த மந்திரத்தைச் சொன்னபோது கண் வெட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு ஒரே ஆச்சரியம். கடந்த சில வாரங்களாகப் பெரியவர் இசைத்து வருகின்ற இந்த மந்திரம் அவளுக்கு மனப்பாடம் ஆகிவிட்டிருந்தது.
“ நன்றி தாத்தா “
“ நல்லது…. உன்ரை பேரென்னம்மா? “
“உமையாள்”
“அட…. உமையாள் …. அருமையான பேர். பார்வதியின்ர இன்னொரு பேர்”
“உமையாள்…!” பிரகாரம் சுற்றிவந்த அம்மா கூப்பிட, “நான் போட்டு வாறன் தாத்தா” என்று சொல்லி அம்மாவிடம் ஓடுகிறாள்.
“ஐயா! ஒரு அரிச்சனை செய்ய வேணும்…”
தட்டுடன் வந்த ஐயர் “என்ன பேருக்கு?” என்று கேட்டார்.
“உமையாள்…. அனுச நட்சத்திரம்…” விளக்கைத் தொட்டுக் கண்களில் ஒற்றிய அம்மா உமையாளையும் அப்படியே செய்ய வைக்கிறா. மூலத்தானத்தில் சிவனுக்கு முன்னால் நின்று, “ஓம்…..” என்று ஆரம்பித்த ஐயர் மந்திரங்கள் பல சொல்லி பூக்களைப் போட்டு தீபம் காட்டுகிறார்.
உமையாள்…. விருச்சிக ராசி….. என்ற இரண்டே இரண்டு சொற்கள் தவிர, ஐயர் கூறியவற்றில் எதுவுமே புரியவில்லை சிறுமிக்கு. என்றுமில்லாத, இந்த அர்ச்சனை நடைமுறை பற்றி மனசுக்குள் பல பல கேள்விகள். வீடு திரும்பும்போது அம்மாவிடம் கேட்டாள்.
“அம்மா..! அரிச்சனை செய்யேக்கை ஐயர் என்ன சொல்லிப் பூசை பண்ணுறவர்?”
“ஆற்றை பேருக்குச் செய்யிறமோ அவை சுகமா இருக்க வேணுமெண்டு சாமியிட்டைக் கேட்டுக் கும்புடுவார்.”
“எனக்கு ஒண்டுமே விளங்கேல்லை…. அவர் என்ன பாசையில அதைச் சொல்லுறவர்?”
“அது சமஸ்கிருத மொழி”
“உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியுமா அம்மா?”
“இல்லை….. ஏன் கேக்கிறாய்?”
“அப்ப… ஐயர் சாமீட்டைச் சொல்லுறது உங்களுக்கு எப்பிடித் தெரியும்?”
“உமையாள்….. வரவர உனக்கு வாய் மெத்திப் போச்சு. அரிச்சனை செய்யேக்கை ஐயர் இப்பிடித்தான் சொல்லுவாரெண்டு தெரியாதே..? வேறை என்ன சொல்லுவார்? இதுக்கு பாசை தெரியவேணுமெண்ட அவசியமில்லை….. பேசாமை வா…..”
உமையாளின் மனம் சமாதானம் அடையவில்லை.
அடுத்த வெள்ளிக்கிழமை. அம்மாவோடு சிவன் கோவிலில் உமையாள். பெரியவர் கண்மூடி சில தேவாரங்கள் பாடி, கடைசியில் பக்தி மேலிட அந்த சிவன் மந்திரத்தை சொல்கிறார். ‘கற்பூர கௌரம் கருணாவதாரம்…’ அம்மா பிரகாரத்தை வலம் வர, உமையாள் பெரியவரிடம் ஓடுகிறாள். மந்திரம் சொல்லி முடித்துக் கண்களைத் திறந்த பெரியவர் அருகில் உமையாள் நிற்பதைக் கண்டார்.
“உமையாள்…. எப்பிடி இருக்கிறாயம்மா?”
“நான் நல்ல சுகம் தாத்தா, உங்களிட்டை ஒண்டு கேக்கலாமா?”
“ம்… கேள் ராசா…. என்ன விசயம்?”
“அது….தாத்தா நீங்கள் இப்ப சொன்ன மந்திரத்தை எனக்குத் தமிழிலை சொல்லித் தாறீங்களா? எனக்கு விருப்பமாயிருக்கு….”
“அது சமஸ்கிருதம்…. தமிழிலை சொல்ல எனக்குத் தெரியாது…..”
“ஓ…. அப்பிடியே…. பொறுங்கோ தாத்தா வாறன்… “ என்று சொல்லி அவ்விடம் விட்டு அவசரமாக ஓடிய உமையாள், நேராக சிவன் வாசலில் போய் நிற்பது தெரிய, ‘இந்தக் குழந்தை என்னதான் செய்யப் போறாள்?’ என்றெண்ணிய பெரியவர், உமையாளைத் தொடர்ந்து தானும் பின்னால் போக,
“ஐயா!” என்ற அவளுடைய குரலைக் கேட்டு ஐயர் அவளை நோக்கி வருவது தெரிந்தது.
“என்னம்மா? என்ன வேணும்? இந்தா வாழைப்பழம்…. சாப்பிடு” என்று சொல்லி ஒரு வாழைப்பழத்தை உமையாளிடம் நீட்டினார். அதைக் கையில் வாங்கிக்கொண்டவள் ஐயரைப் பாரத்து,
“அந்தக் கற்பூர கௌரம் எண்ட மந்திரத்தை எனக்குத் தமிழிலை சொல்லித் தாறீங்களா ஐயா?” என்று கேட்டபோது, இதைச் சற்றும் எதிர்பார்க்காத ஐயர் திடுக்கிட்டுப் போனார். சிறிது நேரம் உமையாளையே பார்த்தபடி எதுவும் பேசாமல் நின்றார்.
“அது சிவனுடைய மந்திரம்” என்றார்.
“தெரியும்… அந்தத் தாத்தா சொன்னவர்… அவருக்கு அதைத் தமிழிலை சொல்லத் தெரியாதாம். உங்களுக்குத் தெரியும்தானே…அதுதான் கேட்டன்…” கும்பிட வந்தவர்களில் பலர் இந்த உரையாடலைக் கேட்டு அங்கு வந்து கூடிவிட்டார்கள். பிரகாரம் சுற்றி வந்த அம்மாவுக்கோ என்ன செய்வதென்று தெரியவில்லை. பதட்டமாகினா.
“உமையாள்…. என்ன இது? ஐயாவைக் கரைச்சல் படுத்த வேண்டாம்….வா என்னோடை….” என்றவ,
“ஐயா! அவ சின்னப்பிள்ளை, தெரியாமை இப்பிடிக் கேட்டிட்டா…. குறை நினைக்காதேங்கோ…….” என்று ஐயரிடம் மன்னிப்புக் கேட்கும் பாவனையில் சொன்னா.
“இல்லையம்மா…. குழந்தை கேட்டதில எந்தப் பிரச்சனையும் இல்லை. தமிழிலை தேவாரங்கள் பாடுறம். அப்பிடிக் கருத்துத் தெரிஞ்சு பாடேக்கை ஒவ்வொரு சொல்லும் எங்கடை உயிர்வரைக்கும் போய் ஒரு பக்திப் பரவசத்தை உண்டாக்குது. அதே நேரம் பெரும்பாலான மந்திரங்கள் தமிழ் இல்லை. பாடுறபோதோ அல்லது சொல்லுறபோதோ பக்தி ஏற்படலாம். ஆனா அது உயிரோடை கலந்து ஏற்படுற பக்தியாக இருக்கமுடியாது. எனக்கு ரெண்டு மொழியும் தெரிஞ்சபடியால இது பிரச்சனையில்லை….. சின்னப்பிள்ளையா இருந்தாலும் உமையாள் எங்களையெல்லாம் யோசிக்க வைச்சிட்டாள். நல்லது உமையாள், நீ கேட்டதுபோல அந்த மந்திரத்தை இப்ப நான் தமிழிலயே சொல்லுறன்.”
“கற்பூர கௌரம் – கற்பூரம் போன்ற வெண்மை நிறம் கொண்டவனை,
கருணாவதாரம் – கருணை வடிவானவனை,
சம்ஸார சாரம் – உலக வாழ்க்கையின் சாரமாக விளங்குபவனை,
புஜஹேந்திர ஹாரம் – புஜ என்றால் பாம்பு…. கேந்திர பாம்புகளின் அரசன்…..ஹாரம் மாலை……..
பாம்பரசனை மாலையாக அணிந்தவனை,
பவம் பவானி சகிதம் நமாமி – பவம் உலகங்களின் காரணனை….. பவானி சகிதம்……. அம்பிகை சமேதனை, நமாமி அடியேன் வணங்குகிறேன்.
…… கற்பூரம் போன்ற வெண்மை நிறம் கொண்டவனை, கருணையே வடிவானவனை, உலக வாழ்க்கையின் சாரமாக விளங்குபவனை, பாம்பரசனை மாலையாக அணிந்தவனை, என் உள்ளத்தாமரையில் என்றும் வசிப்பவனை, உலகங்களின் காரணனை, அம்பிகை சமேதனை அடியேன் வணங்குகிறேன்”
“உமையாளுக்கு இப்ப சந்தோசமா?” ஐயர் இப்படிக் கேட்டபோது, கணகள் பளிச்சிட மகிழ்ச்சியோடு தலையாட்டினாள் உமையாள். அர்த்தம் தெரிந்தபோது அத்தனை பேரும் உயிர் கரைந்து நின்றார்கள்.
இதுவரை காலமும் அந்த மந்திரத்தை உச்சரித்த வேளைகளில் ஏற்பட்ட பக்தியின் சிலிர்ப்பு, இதோ இன்று இந்த நிமிடத்தில் பல மடங்காகி உயிர்வரை சென்று ஊடுருவி ஆன்மாவைத் தொட்டபோது, கை கூப்பி சிவனை வணங்கியபடி நின்றிருந்த பெரியவரின் கண்கள் நீரைச் சொரிந்தன.