மணல், போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் கிளிநொச்சி பொலிஸார்; ஒருங்கிணைப்புக் குழுவில் சிறீதரன், கஜேந்திரன் எம்.பி.மார் பகிரங்க குற்றச்சாட்டு

மணல், போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் கிளிநொச்சி பொலிஸார்; ஒருங்கிணைப்புக் குழுவில் சிறீதரன், கஜேந்திரன் எம்.பி.மார் பகிரங்க குற்றச்சாட்டு

கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்கள் என்பவற்றின் பின்னணியில் கிளிநொச்சி பொலிஸாரே உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளனர்

கிளிநொச்சி மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சட்ட விரோத மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில் பிரதேச செயலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போதே இவ்வாறான மணல் அகழ்வுகளின் பின்னனியிலும் போதைப் பொருள் வியாபாரத்தின் பின்னனியிலும் பொலிஸாரே உள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பகிரங்கமாக சுட்டிக்கட்டினர்.

மணல் மாபியாக்களின்முழு ஒத்துழைப்புடன் செவ்வாய்க்கிழமை கிளிநொச்சியில் பொலிஸாரால் விளையாட்டுப் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பில் பொலிஸாருக்கு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கடிதம் எழுதுகின்ற போது அந்த கடிதத்தை மண்ல் கடத்தல்காரர்களுக்கு பொலிஸார் காண்பித்துள்ளனர் எனவும் சிறீதரன் எம்.பி.தெரிவித்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன்,

மாவட்டத்தில் இடம்பெறுகின்ற அத்தனை சட்டவிரோத செயல்களுக்கு பின்னணியிலும் பொலிஸாரே உள்ளனர் எனக் குற்றஞ்சாட்டினார். மாவட்டத்தில் சேவையாற்றுகின்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு செயற்பாடுகள் செயற்பாடுகள் அமைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சட்டவிரோத மணல் கடத்தல்களுடன் பொலிஸாருக்கு தொடர்புள்ளது என்ற கருத்தை மாட்ட பொது அமைப்புகள் சிலவும் உறுதி செய்கின்றன. எந்த விதமான அனுமதி பத்திரங்களும் வழங்கப்படாமல் கிராமப்புறங்களில் குறிப்பாக கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட ஊரியான், கோரக்கண்கட்டு, கல்லாறு, தட்டுவன்கொட்டி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் பொலிஸாரே இருக்கின்றனர். பொலிஸ் அதிகாரிகளுக்கு சொந்தமான டிப்பர் வாகனங்களும் சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபடடுகின்றன எனவும் பொது அமைப்புகளால் குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )