
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முதலில் சிங்களத் தரப்புக்களை ஒன்றிணையுங்கள் ஜனாதிபதிக்கு கருணாகரம் எம்.பி. அறிவுரை
தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணையவைத்து பொருளாதாரத்தினை நிலைநிறுவுவதற்காக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை வைத்துவிட்டு எங்களுடன் பேசவாருங்கள் நாங்கள் பூரண ஒத்துழைப்பினை தருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
ஜனாதிபதி தனது மே தின உரையில் தமிழ் கட்சிகளுக்கு விடுத்த அழைப்பு தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்த கோவிந்தன் கருணாகரம் எம்.பி மேலும் கூறுகையில்,
மேதின உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முக்கியமான கருத்தினை வெளியிட்டிருந்தார்.இந்த வருட இறுதிக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு உத்தேசித்துள்ளதாக கூறியிருக்கின்றார்.இதேபோன்றுதான் கடந்த ஆண்டும் சென்ற சுதந்திரதினத்திற்கு முன்னர் தீர்வினை காணவேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த ஆண்டுக்குள் தீர்வினை காண்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தமிழ் தரப்புகள் இந்த தீர்வு காணும் விடயத்தில் பின்னடிப்பதாகவும் விலகி தூரநிற்பதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் போராட்டம் நடைபெற்ற காலம் தொடக்கம் ஒரு பக்கம் ஆயுதப்போராட்டம் நடைபெற்றாலும் மாறிமாறி வந்த ஆட்சியாளர்களுடன் தமிழ் தரப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டே வந்தார்கள்.இலங்கையில் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் மகிந்தராஜபக்ஸவுடன் 18சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டன.மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தில் ஜனாதிபதியை விட அதிகாரம் கூடியவராக இன்றைய ஜனாதிபதி பிரதமராகயிருந்தார்.அப்போது பாராளுமன்றத்தினை இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கும் ஒரு சபையாக மாற்றி பல கூட்டங்களை நடத்தியபோதும் அது ஏமாற்றப்பட்டதாகவே சென்றுவிட்டது.
அந்த வகையில் இலங்கையிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தன்னுடன் இணைந்து இனப்பிரச்சினைக்கான தீர்வினை காண்பதற்கு முன்வரவேண்டும் என்று கூறுகின்ற ஜனாதிபதி , இந்த நாட்டின் பொருளாதாரம் இந்த நிலைமைக்கு மாறியதற்கு இலங்கையின் இனப்பிரச்சினைதான் காரணம் என்பதை சிங்கள மக்களுக்கும் பேரினவாதிகளுக்கும் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூறி அவர்களை தங்களுடன் இணைத்து இந்த இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு முயற்சிக்கவேண்டும்.அதன் ஊடுடாக கொண்டுவரப்படும் தீர்வுத்திட்டத்தினை பாராளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் வைத்துவிட்டு தமிழர்தரப்புடன் பேசவேண்டும்.
நாங்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கு பின்னடிப்பவர்களோ விலகி நிற்பவர்களோ அல்ல என்பதை நாங்கள் உறுதியாக தெரியப்படுத்துவோம்.அதனைவிடுத்து தற்போதைய பொருளாதார நிலைமையினை சீர்செய்வதற்காக மீண்டும் மீண்டும் தமிழ் தரப்புகளை ஏமாற்றி அரசாங்கத்தில் இணையவைத்து இலங்கையின் பொருளாதாரத்தினை நிலை நிறுவத்துவதற்காக மக்களை ஏமாற்றாமல் உண்மையாக சிந்தித்து இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தினை முன்வைத்துவிட்டு எங்களுடன் பேசவாருங்கள்.நாங்கள் பூரண ஒத்துழைப்பு தருவதுமட்டுமல்லாமல் புலம்பெயர்ந்துள்ள மக்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை கூட நிலை நிறுத்த உதவிசெய்வார்கள் என்பதை உறுதியாக கூறிக்கொள்கின்றோம் என்றார்.

