மனித உரிமைகளின் தற்கால நிலைமை

மனித உரிமைகளின் தற்கால நிலைமை

பாகம்-3
மனித இனம் 10,000 ஆண்டுகளுக்கு முன் சமூகங்களாக ஓரிடத்தில் வாழத்தொடங்கிய காலத்திலிருந்து 99 வீதமான காலம் வரை, அது மனித உரிமை என்ற சொல்லையோ அதுபற்றிய தற்கால விளக்கத்தையோ பேசவில்லை என்பதை இத்தொடரின் முதலாம் பாகத்தில் பார்த்தோம். 1948 க்கு பின்புதான் இது ஐநாவால் பலமடங்கு விரிவாக்கப்பட்டு பலரும் பேசும் ஒரு பொதுபுத்தி விடயமாக மாறியது என்பதை இத்தொடரின் இராண்டாவது பாகத்தில் பார்த்தோம். இப்பாகத்தில இது எவ்வாறு நடைமுறையில் தாக்கம் செலுத்தி வந்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.

தற்காலத்தில் மிகவும் அதிகமாக மீறப்பட்டுவரும் மனித உரிமைகள் எவை? சித்திரவதையே முன் வந்து நிற்கிறது. இதைத் தொடர்ந்து சட்டத்திற்கு அப்பால் செய்யப்படும் கைதுகளும் காணாமல் போதல்களும் இருக்கின்றன. அதிகமான சந்தர்ப்பங்களில் இம் மூன்று மீறல்களும் ஒன்றோடொன்று தொடர்புடையதாகவே இடம் பெறுகின்றன. ஐநாவில் ஏறக்குறைய 200 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. அதில் 170 க்கும் மேற்பட்ட நாடுகள் சித்திரவதைக்கு எதிரான ஐநாவின் சாசனத்தை ஏற்று கையொப்பமிட்டுள்ளன. இருந்தும் 150 அதிகமான நாடுகள் சித்திரவதையை வழமையாக செய்கின்றன என்கிறார் சிகாகோ பல்கலைக்கழகத்தின் சட்டக்கல்லூரியின் எரிக் பொஸ்னர். சர்வதேச மன்னிப்பு சபையும் மனித உரிமை மீறல்கள் உலகளாவியரீதியில் அதிகரித்து வருவதாக சொல்கிறது. அதன் ‘Global Torture Report” அதிர்ச்சியூட்டும் விபரங்களை தொகுத்து தருகிறது.

இவ்வாறு நிலமை இருந்தாலும் UDHR எனப்படும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் என்பது ஒரு மிகப்பெரிய தார்மீக சாதனை என்றே பலரும் கருதுகிறார்கள். ஆனால் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது என்றால் எங்கோ பிழை இருக்கிறது என்றுதானே கருத வேண்டியிருக்கிறது. மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வரும் இக்காலத்தில் மனித உரிமைகள் என்ற சொல்லாடலும் கருத்தாடலும் அதிகரித்து வருவது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. பூகோள மட்டத்தில் நாடுகள் இதை ஒரு தர்மீக பொறுப்பாக கருதாமல் இதை ஒரு தந்திரோபயமாக கையாள்வதே இதன் பிரதான பலவீனமாக உள்ளது. அதிகமான சந்தர்ப்பங்களில் மனித உரிமை மீறல்கள் கண்டிக்கப்படாமலே தவிர்க்கப்படுகின்றன. மனித உரிமைகள் பற்றி பேசும் மிகவும் அறியப்பட்ட மூவரின் வார்த்தைகளூடாக இதன் நிலைமையை மேலும் பார்ப்போம்.

உலகில் இன்று பொதுவெளியில் இயங்கும் அதிகம் அறியப்பட்ட அறிவுசீவி என்று விபரிக்கப்படும் இளைப்பாறிய பேராசிரியர் நோம் சொம்ஸ்கி மனித உரிமைகள் பற்றிய ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்.

“தற்காலத்தில் மனித உரிமைகளின் நிலைமையைப் பார்க்க முதல், அதனுள் என்னவெல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன என்று பார்ப்பது நல்லது. இது சந்தேகமில்லாமல் மீண்டும் மீண்டு எழுகிறது. உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் சர்வதேச மன்னிப்புசபை “வறுமையே உலகில் மோசமாக மீறப்படும் மனித உரிமை” என்றது. அதே காலகட்டத்தில் ஐநாவின் உணவு அமைப்பு உலகில் பசியோடு வாழும் மக்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனுக்கும் அதிகமாகி விட்டது என்றது. அதே காலத்தில் பணக்கார நாடுகள் வங்கிகளுக்கு கைகொடுப்பதற்காக அதன் உணவு உதவிகளை குறைத்தன. ஒவ்வொரு நாளும் 10,000 சிறுவர்கள் பசியால் ஏற்பட்ட நோய்களால் இறக்கிறார்கள் என்றது ஒக்ஸ்பாம் அமைப்பு – ருவன்டாவில் 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டவர்கள் விட இது அதிகம். இது ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடக்கிறது. அதிகரித்தும் வருகிறது. உலகின் மிகவும் பணக்கார நாடான அரெிக்காவில், வைத்திய சேவை மனித உரிமையா என்று விவாதித்து கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் ஒவ்வொரு ஆண்டும் அங்கே 45,000 மக்கள் வைத்திய காப்புறுதி இல்லாமல் இறக்கிறார்கள். உலகிலேயே வைத்திய சேவை தேவைக்கேற்ப என்றில்லாமல் பணவசதியால் நிர்ணயிக்கப்படும் ஒரே நாடாக அமெரிக்க இருக்கிறது. உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வகையான இறப்புக்கள் எல்லாம் பணக்கார நாடுகளின் செல்வத்தில் மிகச்சிறிய ஒரு பகுதியால் தடுக்கப்படலாம். இவர்கள் உயிர் வாழும் உரிமையை மனித உரிமையாக கருதுகிறார்களா என்பதே கேள்வி.
மனித உரிமைக்கு ஒரு அருமையான சாசனம் இருக்கிறது – ஐநாவின் சாசனமும் மனித உரிமை பிரகடனமும். ஐநாவின் சாசனம் மற்றவையைவிட மோசமான சர்வதே குற்றமாக போர் தொடுப்பதை விபரிக்கிறது. நடைமுறையில் ஐநாவின் இச்சாசனம் பல காலத்துக்கு முன்னரே மீறப்பட்டுவிட்டது.

உறுப்புரை 2(4) குப்பைத்தொட்டியில் போட்டாகிவிடடது. சர்வதேச சட்டம் பற்றிய ஆய்வுகளில் இதில் சொல்லப்படுவதை பலவிதமாக பொருள்கொடுத்து விபரிப்பார்கள். அமெரிக்கா போர் தொடுக்கும் போது ஒருவிதமாகவும் ரசியாவோ அல்லது சதாம் ஹசெயினோ போர் தொடுக்கும் போது வேறு விதமாகவும் பொருள் கொடுப்பார்கள்.”
இவ்வாறு தற்கால மனித உரிமை நிலைமையை கடுமையாக விமர்சிக்கிறார் நோம் சொம்ஸ்கி. வேறொரு பேராசிரியர், லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் பல்கலைக்கழகத்தில் சட்ட கல்லூரி பேராசிரியராக இருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராதா டி சொய்சா, ஒரு நூலுக்கு அவர் எழுதிய “அறிதலில் அபசுரங்கள் கேட்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம்” என்று தலைப்பிட்ட முன்னுரையில், மனித உரிமைகளின் தற்கால நிலைமையை இவ்வாறு அவர் விபரிக்கிறார்.

“பக்கத்து நாடான இந்தியாவின் உள்விவகார அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம் சிறிலங்காவின் தமிழர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளால் தூண்டப்பட்டு, இந்திய அரசும் தனது உள்நாட்டு கிளர்ச்சியாளர்களை “சிறிலங்கா தீர்வின்” ஊடாக கையாளும் என்று அறிவித்து இந்தியாவின் பூர்வகுடிகள் நிலத்தில் “கிறீன் ஹன்ட் நடவடிக்கையை” தொடக்கி வைத்தார். சிதம்பரம் “சிறிலங்கா தீர்வை” பின்பற்றிய அதே காலத்தில், மேற்குலக ஊடகங்கள் கேர்னல் கடாபி தனது சொந்த மக்களை சுடுவது பற்றி உத்வேகத்துடன் செய்திகள் வெளியிட்டன. ஒரே கேள்வியை ஊடகங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பின – ஒரு நேர்மையான அரசு எவ்வாறு தனது சொந்த மக்களை சுடலாம்? நேட்டோ இராணுவ கூட்டு வெற்றிகரமாக லிபியாவை தாக்குவதற்கு இதுவே நியாயமாக முன்வைக்கப்பட்டது. அதே நேரம், இந்தியாவின் உள்விவகார அமைச்சர் இந்தியாவின் இராணுவத்தை சொந்த மக்கள் மீது ஏவியதற்கும் இதே போன்ற ஊடக கவனம் தேவையில்லை போலும். இவற்றையெல்லாம் நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? அதாவது சில அரசுகள் தங்கள் சொந்த மக்கள் மீது போர் தொடுக்கலாம் ஆனால் வேறு சில அரசுகள் அவ்வாறு செய்வதை அனுமதிக்க முடியாது என்றா?
ஐ-அமெரிக்கா தொலைக்காட்சி CBS இல் 1996 டிசம்பர் 5ம் திகதி ஒரு நேர்காணல். நிகழ்ச்சி – 60 Minutes. நேர்காணல் எடுப்பவர் லெஸ்லி ஸ்டால். நேர்காணல் கொடுப்பவர் ஐ-அமெரிக்க வெளியுறவு செயலாளர் மடலின் ஆல்பிரைட். இராக்கின் மேல் தடைகள் போட்டதால் ஆயிரக்கணக்கான இராக்கி சிறுவர்கள் இறந்திருப்பது பற்றி அவரை கேட்டபோது அவர் சொன்ன பதிலிலிருந்து.

இராக்கின் மீதான ஐ-அமெரிக்க தடைகள் பற்றி லெஸ்லி ஸ்டால், “அரை மில்லியன் சிறுவர்கள் இறந்திருக்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம். அதாவது ஹிரோசிமாவில் இறந்த சிறவர்களின் எண்ணிக்கையைவிட இது அதிகம். ஒரு நோக்கத்தை நிறைவேற்ற இத்துணை சிறுவர்கள் கொல்லப்படுவது இது சரிதானா?”
வெளியுறவுத்துறை செயலாளர், “இது ஒரு கடினமான தெரிவு ஆனால் அதற்கான விலை – அது சரிதான் என்று நாங்கள் நினைக்கிறோம்”.

இராக்கின் மீதான ஐநாவின் தடை ஆகஸ்ட் 1990 இல் – ஐநா, சிறுவர் உரிமைகள் சாசனத்தை 1989 நவம்பரில் பிரகடனப்படுத்தியதை தொடர்ந்து – போடப்பட்டது. ஐநா சிறுவர் உரிமைகள் சாசனம் ஒவ்வொரு சிறுவருக்குமான உயிர். உணவு தண்ணீர், கல்வி, ஆராக்கியம், அடையாளம், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு உரிமைகளை அங்கீகரிக்கிறது. இராக்கின் மீதான தடை தொடர சிறுவர்கள் அங்கு இறப்பதும் தொடர்ந்தது. ஐநாவில் சிறுவர் உரிமைகளை பற்றிய விவாதங்களும் தொடர்ந்தன. சிறுவர் உரிமைகள் சாசனம் சார்ந்த ஐநா அறிக்கைகளை தயாரிப்பதற்கான திட்டங்களும் விரிவாக்கப்பட்டன (1991). சிறுவர் தொழிலாளிகளும் இச்சானத்திற்குள் சேர்க்கப்பட்டனர் (1999). சிறுவர் போராளிகள் பற்றியும் (2000) சிறுவர் கடத்தல் பற்றியும் (2000) மேலதிக விதிமுறைகள் சேர்க்கப்பட்டன. இதே காலத்தில் ஐநாவின் மனிதநேய உதவிகள் ஒருங்கிணைப்பாளர் டெனிஸ் ஹலிடே இராக்கில் 13 மாதங்களும் ஐநாவில் 30 ஆண்டுகளும் பணியாற்றியதை தொடர்ந்து பதவியிலிருந்து நீங்கினார். அப்போது அவர்,

“தண்ணீர் மற்றும் துப்பரவு, போதிய உணவு, நல்ல வைத்திய வசதிகள் போன்றவை இல்லாமல் ஒவ்வொரு மாதமும் 4000 இலிருந்து 5000 வரையான சிறுவர்கள் இங்கு அவசியமில்லாமல் இறக்கிறார்கள்.” என்றார்.

ஒட்டுமொத்த சமூகத்திற்கு உணவும் சுகாதாரமும் சேருவதை தடைசெய்தால் அங்கு சிறுவர்கள் இறப்பார்கள் என்பது பொதுப்புத்திக்கு தெரிந்தது தானே? இப்பொதுப்புத்தி ஏன் அருகிவிட்டது? சட்டப்புத்தகத்தில் மேன்மேலும் சட்டங்களை சேர்ப்பது அருகிவரும் பொதுப்புத்தியை ஈடுசெய்யுமா?

ஐநா சாசனம் – சுயநிர்ணயம் மற்றும் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பற்றிய அத்தியாயங்கள் உட்பட – எழுதப்பட்டுக்கொண்டிருந்த அதே காலப்பகுதியில், பாலஸ்தீன தேசம் காலனியாதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தது. ஐநா 1945 இல் உருவாகிய பின், இஸ்ரேயிலை உருவாக்குவதற்காக பாலஸ்தீனத்தை பிரிப்பதே அதனது முதல் நடவடிக்கையாக இருந்தது. 1948 இல் இஸ்ரேயில் ஒருதலைப்பட்சமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்தியது. தொடர்ந்து பாலஸ்தீனர்களை பெரும்தொகையாக அவர்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றியது. அதே நேரத்தில் காலனியத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான கட்டமைப்புக்களை ஐநா அதன் சாசனத்தின் கீழ் உருவாக்கியது. 1948 இல் ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான பிரதிநிதியான சுவீடனை சேர்ந்த ஃபோக் பேர்னடொட் என்பவரை சியோனிச அமைப்பான LEHI கொலை செய்தது. அதே சியோனிச அமைப்பு 1949 ஏப்பிரலில் இல் Deir Yassin என்ற பாலஸ்தீனர்களின் படுகொலையையும் செய்தது. மே 1949 இல் இஸ்ரேயில் ஐநாவில் அங்கத்துவம் பெற்றது. அப்போது இஸ்ரேயில் அமைதியை விரும்பும் நாடு என்று விபரிக்கப்பட்டது. இவ்விபரங்கள் எல்லாம் எவரும் பார்க்ககூடிய பொதுவெளியில் கிடைக்கிறது. அவை பிழையாக விளங்கிக் கொள்ளப்படுவதற்கோ அல்லது முழுதாக புறந்தள்ளப்படுவதற்கோ அவை பொது வெளியில் கிடைக்கவில்லை என்பது மட்டும் காரணமல்ல.”

ராதா டி சொய்சா எழுதிய “What is Wrong With Rights” என்ற நூலைப்பற்றி இறுதி பாகத்தில் மீண்டும் பார்ப்போம். இறுதியாக சிகாகோ பலகலைக்கழகத்தில் சர்வதே சட்ட வல்லுனராக பணிசெய்யும் பேராசிரியர் எரிக் பொஸ்னரின் “The Twilight of Human Rights Law” என்ற நூல் இக்கருத்தை மேலும் விளக்குகிறது. இவருடைய நூல் பற்றியும் இறுதி பாகத்தில் மேலும் பர்ப்போம். சுருக்கமாக அவர் சொல்லும் சில கருத்துக்கள் கீழே.
“நாடுகள் பவித்திரமாக மனித உரிமை சாசனங்களை ஏற்று ஒரு நீண்ட மனித உரிமை சாசனங்களின் பட்டியலில் கையொப்பமிடுகின்றன.

இது பற்றிய உரைகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டுவதும் அதிகரித்து வரும் அதே காலத்தில் இதன் மீறல்கள் பெரிதளவு குறைவதாக இல்லை. மனித உரிமை குற்றவாளிகளாக அறியப்பட்ட லிபியா, சவுதி அரேபியா, சுடான் போன்ற நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் இருந்திருக்கின்றன. ஆனால் பெரிதும் அறியப்பட்ட மனித உரிமை மீறும் நாடுகள் மட்டுமல்ல பிரேசில் நாடு சட்டத்திற்கு அப்பால் கொலை செய்வதை வழமையாக கொண்டிருக்கிறது. சவுத் ஆபிரிக்கா போராட்டக்காரர்கள் மீது வன்முறை செய்கிறது. இந்தியா சிறுவர் தொழிலாளர்களை ஏற்றுக்கொள்கிறது. ஐ-அமெரிக்கா சித்திரவதைளை கையாளுகிறது.

மேலும், செப்டம்பர் 9/11 க்கு பின்னர் அமெரிக்கா சித்திரவதைகள் செய்வதும், ட்ரோன்கள் மூலம் கொலைகள் செய்வதும் அதற்கான மதிப்பை கெடுத்து விட்டது. அடிமைத்தனம் கூட இன்றும் முற்றாக அழிக்கப்படவில்லை.”

இவ்வாறு மனித உரிமைகளின் தற்கால நிலைமையை விபரிப்பவர்கள் அதிகம் உள்ளார்கள். இவர்களுக்கு மையநீரோட்ட ஊடகங்களின் வெளிச்சம் கிடைப்பது மிகவும் அருமையாக உள்ளதால் உலக மக்கள் ஐநா பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் குழப்பத்திலேயே உள்ளார்கள். இது ஏன் என்பதை இத்தொடரின் இறுதி பாகமான பாகம்-4 இல் பார்ப்போம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )