நலன்சார் அரசியல் யாருக்கு ஆதாயம்?

நலன்சார் அரசியல் யாருக்கு ஆதாயம்?

ஒரு நாடு விடுதலை பெறும்போது, அந்த நாடு தன்னுடைய விடுதலைப் போராட்டத்தினால் விடுதலையடைந்தது என்றோ, அல்லது அம்மக்களிற்கு நீதி கிடைப்பதற்காக விடுதலையடைந்தது என்றோ மட்டும் கருத முடியாது. புவிசார் அரசியலில், பலம் வாய்ந்த நாடுகள் தங்கள் நலன்சார் அரசியலுக்காக காய் நகர்த்தும்போது, அவர்களுக்கு உபயோகமாகவிருக்கும் சில நாடுகள் தனிநாடாகுவது தமக்கு சாதகமாக அமையும் என்ற நிலையில், அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப் படுகின்றன. அந்த வகையில் தமிழர்களின் தாயகம் உருவாகுவதற்கான புவிசார் சூழ்நிலை ஒன்று சர்வதேச மட்டத்தில் திரண்டு வருவதான சிந்தனை பேசு பொருளாக உள்ளது.

தமிழர்களுக்கான எந்தத் தீர்வை எடுப்பதாக இருந்தாலும், இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு செய்ய முடியாது. அதற்கு எந்த நாடுகளும் தயாராக இல்லை என்பதை இந்து சமுத்திரப் பிரதேச புவிசார் அரசியல் தெளிவாக உணர்த்துகின்றது. மொழிவாரியான மாவட்டங்கள் தமிழர் தாயகம் என்பதை இந்தியா வற்புறுத்தினால், மொழிவாரி மாநிலங்கள் தனிநாடு கேட்கும் அபாயம் இந்தியாவில் எழுந்துவிடும். அதை இந்தியா அனுமதிக்க மாட்டாது. இந்தியாவிற்கு ஈழத் தமிழர்களின் உதவி தேவை என்ற நிலை வரும்போது, எங்களால் எங்கள் நிலையில் இறுக்கமாக இருந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்த முடியும். இப்போது நிலைமை அப்படியல்ல. நாங்களாகப் போய் நிற்கும்போது, தருவதை வாங்க வேண்டிய நிர்ப்பந்த அரசியலுக்குள் தள்ளப்பட்டு விடுகிறோம். இந்தியா அரைத்த மாவையே அரைக்கப் போகின்றது என்பதில் ஐயமில்லை.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சீனாவின் கை ஓங்குவதை மேற்குலகத்தினால் – குறிப்பாக அமெரிக்காவினால் சகித்துக் கொள்ள முடியாது. இரு தசாப்தங்களின் பின், ஆப்கானை தலிபான்கள் வசம் விட்டு அமெரிக்கா வெளியேறி இருக்கிறது. இலங்கையில் திருகோணமலைத் துறைமுகத்தையும் சூழவுள்ள 33,000 ஏக்கர் நிலத்தையும் இரகசியமாகக் குத்தகைக்கு எடுத்திருப்பதாக இலங்கை தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் செய்தி கசிய விட்டுள்ளது. இவையெல்லாம் அமெரிக்கா தனது யுக்தியை மாற்றி, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தன்னுடைய நிலையை நிலைநிறுத்துவதற்காக, ஆப்கானை விட்டு விலகி இலங்கையை தளமாக்க திட்டமிட்டு இருப்பதையும், அதன்மூலம் சீனாவை நெருக்கடிக்குள் தள்ள முனைவதையும் எடுத்துக் காட்டுகின்றன.

இவற்றினால் ஈழத் தமிழர்களிற்கு ஆதாயம் எதுவுமில்லை. ஆனாலும் பிரச்சனை எதுவும் எழாமல் சுமுகமாக காய் நகர்த்த நினைக்கிறது அமெரிக்கா. இன்னொரு புறத்தில், சுமந்திரனும் பீரிசும் அமெரிக்க வெளியுறவு அமைச்சரை சாட்சியாக வைத்து அமெரிக்காவில் நடத்திய இரகசியப் பேச்சுவார்த்தையும், அமெரிக்க காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட ‘வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம்’ என்ற அதிகாரம் எதுவுமற்ற தீர்மானமும் ஈழத் தமிழர்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காரணம்காட்டி GSP வரியை நிறுத்தப் போவதாக ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு பயம் காட்டுகின்றது. பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் இலங்கையால் அதை மீற முடியாது. இவை எல்லாமுமே இலங்கை உலகநாடுகளின் பிடிக்குள் சிக்கித் தவிப்பது போலவும் உலக நாடுகள் எல்லாம் இணைந்து தமிழீழத்தை பெற்றுத் தரப்போவது போலவும் ஒரு பிரமையை ஈழத் தமிழர்களுக்கு ஏற்படுத்தக் கூடும். செப்ரெம்பரில் ஜெனிவாவில் மனித உரிமைகளுக்கான கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ளது. காணாமற் போனோர் தொடர்பான சாட்சியங்களை ஆவணப்படுத்தலுக்கான நிதி ஒதுக்கீடும் கிடைக்கப் பெற்ற நிலையில் இம்முறை இலங்கையின் இனப் படுகொலையை உறுதிப் படுத்த முடியும் என்ற தமிழர்களின் நம்பிக்கை பிசுபிசுத்துப் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம். தமிழர்களுக்கு தீர்வு கிடைக்க இருப்பதான சூழ்நிலையை உருவாக்கிய அதே உலகநாடுகள் சிங்களத்தையும் சிங்களர்களையும் திருப்திப்படுத்த இனப்படுகொலை விவகாரத்தில் மீண்டும் நழுவல் நிலையைக் கடைப்பிடிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

தீர்வு என்ற பெயரில் தமிழர்களையும் மனித உரிமைகள் விவகாரத்தில் கண்டும் காணாமலும் இலங்கையையும் மேற்குலகம் திருப்திப்படுத்தும் என்று நம்ப இடமுண்டு. திருகோணமலையையும் சூழவுள்ள இடங்களையும் கொடுப்பது உண்மையானால் இலங்கை காப்பாற்றப் படலாம். இதற்கிடையில், யார் குற்றினாலும் சரி, தமிழர் தரப்பில் யார் பிரதிநிதி என்பதில் கடுமையான போட்டி ஆரம்பித்துவிட்டது. ‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்று முழங்கிய திலீபன் தன்னை ஆகுதியாக்கி இந்த வருடத்துடன் 34 ஆண்டுகள் நிறைவடைகின்றன. திலீபனின் கனவு கனவாகவே போய்விடுமா? இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்ற நிலையில் தினம்தினம் அவலப்படும் எம் மக்களுக்கான தீர்வுக்கு, மற்றவர்கள் விடுதலையைப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பியிராமல் எமக்கான சரியான அரசியற் பாதையில் நகர்வது மிக முக்கியமானது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )