
பெரமுனவுக்குள் தொடரும் குழப்பம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்குள் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் கட்சி தற்போது மூன்றாகப் பிளவுபட்டுள்ளது. இந்நிலையில் அக்கட்சியில் உள்ள
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், அடுத்தகட்ட நகர்வு பற்றி முடிவெடுப்பது குறித்து குழப்பத்தில் உள்ளனர்.
டலஸ் அழகப்பெரும தலைமையில் அணி ஒன்று கட்சிக்குள் இருந்து வெளியேறிவிட்டது. பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ரொஷான் ரணசிங்க என மற்றுமொரு அணி ரணில் விக்கிரமசிங்க பக்கம் நிற்கின்றது. ராஜபக்சக்களுக்கு விசுவாசமாக ஒரு அணி செயற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் எதிரணிக்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்டால் என்ன செய்வதென்று மொட்டுக் கட்சிக்குள் உள்ளக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
அவ்வாறு சென்றால் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக்க வேண்டும் என மொட்டுக் கட்சிக்குள் ஒரு அணி வலியுறுத்தியுள்ளது. இதைவிட பசில் ராஜபக்சவை நாடாளுமன்றம் அழைத்து வந்து அவரை எதிர்க்கட்சித் தலைவராக்குவது நல்லது என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு செய்வதெனில் பசில் இரட்டைக் குடியுரிமையை துறக்க வேண்டும்.
இதற்கிடையே பசிலுக்கு தேசியப்பட்டியல் ஆசனத்தை விட்டுக்கொடுக்க ஜயந்த கெட்டகொட தயார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் ஒரு பிரிவினர் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரை ரணில் விக்கிரமசிங்கவுடன் இருப்பதுதான் நல்லது என்ற ஆலோசனையும் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக பொதுஜன பெரமுன கூட்டணி சார்பில் ரணில் விக்கிரமசிங்கவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்த தகவல்கள் வெளியாகின. ஆனால் பெரமுன தரப்பில் பசிலை முன்னிறுத்த ஒரு தரப்பினர் விரும்புவதாக தெரிகிறது. இதன் பின்னணியிலேயே பொதுஜன பெரமுனவுக்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

