புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு திடீர் எதிர்ப்பு; ரணிலை எதிர்க்கத் தயாராகிறதா மொட்டு ?

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு திடீர் எதிர்ப்பு; ரணிலை எதிர்க்கத் தயாராகிறதா மொட்டு ?

பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடிப்படை மனித உரிமையையும் மீறும் எந்தவொரு சட்டத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்குமெனவும் இந்நாட்டுக்கு மிகவும் பொருத்தமான தலைவராக பஷில் ராஜபக்சவே இருப்பதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளதுடன் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் எனவும் கூறினார்.

அண்மைய நாட்களாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை ஆதரித்ததுடன் பொதுஜன பெரமுனவின் பொது ஜனாதிபதி வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்குவது தொடர்பான பெரமுனவினர் சிலரின் கருத்துக்களுக்கு எதிர்ப்புத்தெரிவிக்காத நிலையில் நேற்று இந்நாட்டுக்கு மிகவும் பொருத்தமான தலைவராக பஷில் ராஜபக்சவே இருப்பதாகவும் மக்களின் கருத்து,பேச்சு சுதந்திரம்,அமைதியான முறையில் ஒன்று கூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை சவாலுக்குட்படுத்தும் சட்டமூலங்களுக்கு கட்சி என்ற ரீதியில் ஒருபோதும் ஆதரவு வழங்க போவதில்லைஎனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் அறிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அறிவித்த அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

யுத்தத்துக்குப் பின்னர், பசில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இந்நாட்டின் வறிய மக்களை உயர்த்தி உலகில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒன்றாக மாற்றியமைத்தார்.அப்பாவி ஏழை மக்களின் மன வேதனையை புரிந்து கொண்டு அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்குத் தேவையான பல நடவடிக்கைகளை எடுத்த தலைவர் பசில் ராஜபக்ஷ, அவரே இந்த நாட்டிற்கு மிகவும் பொருத்தமான தலைவர் .

கடந்த காலங்களில் அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும் அவர் அச்சமின்றி அவற்றை எதிர்கொண்டார்.

இதேவேளை ஒரு கட்சி என்ற ரீதியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களின் கருத்துக் கூறும் அடிப்படை உரிமையைக் குறைக்கும் எந்தவொரு சட்ட மூலத்திற்கும் அல்லது சட்டத்திற்கும் ஒருபோதும் உடன்படாது. பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறை சில வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த சட்டமூலமானது கருத்து வேறுபாடுகளின் ஒவ்வொரு செயலையும் பயங்கரவாதம் என்று வரையறுத்தால், அந்த சட்டமூலம் ஜனநாயக சமுதாயத்திற்கு ஏற்றது அல்ல. ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்களின் அடிப்படையில் சட்டமூலத்தை முன்வைக்கும் நீதி அமைச்சருக்கும் மேற்படி சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை எனத் தெரிகின்றது.

இந்த சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்யவும், நிபுணர் குழுவை நியமித்து ஆய்வு செய்யவும், ஜனநாயகக் கோட்பாடுகளை மீறாத சட்டமூலத்தை தாக்கல் செய்யவும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒரு அரசாங்கம் ஒரு சட்டமூலத்தை அறிமுகப்படுத்தும் போது, அரசாங்கம் நிச்சயமாக சட்டத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அத்தகைய நம்பிக்கை இல்லாத நிலையில், அத்தகைய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை .பொதுமக்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடிப்படை மனித உரிமையையும் மீறும் எந்தவொரு சட்டத்தையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கும்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஒப்பிட்டு ஒரு தரப்பினர் அரசியல் பிரசாரம் செய்வது அருவருக்கத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாட்டை ஒன்றுபடுத்தினாரே தவிர பிளவுப்படுத்த முயற்சிக்கவில்லை.உலக வரைபடத்தில் இலங்கை ஒற்றையாட்சி நாடாக காணப்படுமானால் அதற்கான கௌவரத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கே வழங்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.குறுகிய காலத்திற்குள் சவால்களை வெற்றிக் கொண்ட கௌரவத்தை அவருக்கு வழங்குவோம்.அதற்காக பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளமை அவரது தனிப்பட்ட நிலைப்பாடே தவிர கட்சியின் நிலைப்பாடு அல்ல. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம்.நாட்டு மக்கள் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் நிச்சயம் ஏற்படுத்துவார்கள் என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )