
அமெரிக்கக் கப்பலில் தப்பிக்க முயன்ற 4 யாழ் இளைஞர்கள்; சுயஸ் கால்வாயில் நுழையும் போது கண்டுபிடிப்பு
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்கக் கப்பலில் சட்டவிரோதமாக ஏறியிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களும், மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வேலணையைச் சேர்ந்த 25 வயது முதல் 32 வயதுக்கு இடைப்பட்ட நான்கு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கப்பல் கடந்த மாதம் 24ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன் அது மறுநாள் ஐரோப்பா நோக்கி பயணத்தை ஆரம்பித்திருந்தது.
எனினும் சுயஸ் கால்வாயில் நுழையும் போது, கப்பலில் பணியாளர்கள், முன்னர் அறிந்திராத நான்கு பேர் கப்பலினுள் இருப்பதை கண்டு, தங்களது நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து கடந்த மாதம் 28ஆம் திகதி இந்த இளைஞர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்தபோது அவர்கள் இலங்கையர்கள் என கப்பலின் பணிக்குழாமினர் உறுதிப்படுத்தி இலங்கைக்கு அருகில் பயணிக்கவிருந்த மற்றுமொரு கப்பலிடம் அவர்களை ஒப்படைத்தனர்.
அடையாளம் காணப்பட்ட பின்னர் அவர்களுக்கான உணவு மற்றும் தங்குமிட வசதிகளை கப்பல் பணியாளர்கள் வழங்கியுள்ளனர்.
பின்னர் நேற்று முன்தினம், குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலின்படி, கடற்படை, பொலிஸார் மற்றும் துறைமுகங்கள் அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று விசேட படகொன்றில்அந்தக் கப்பலுக்கு சென்று அவர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் திருமணமானவர் என்றும், கொழும்பு துறைமுகத்தில் பொறியியல் சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றின் பெயரில் துறைமுகத்துக்குள் இவர்கள் நுழைவதற்கான அனுமதிப் பத்திரங்களை எடுத்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் கடந்த மாதம் 25ஆம் திகதி முற்பகல் தொழிலாளர்கள் அணிந்திருந்த ஆடை மற்றும் தலைக்கவசங்களை அணிந்து இந்தக் குழுவினர் கப்பலுக்குள் நுழைந்ததும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நால்வரும் இலங்கைக்கு வந்த மற்றுமொரு கப்பலில் அழைத்து வரப்பட்டதுடன், குறித்த கப்பல் சந்தேகநபர்கள் நால்வரையும் காலி துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.
இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார், இணையம் மூலம் அடையாளம் காணப்பட்ட ஒருவர், ஒரு இலட்சம் ரூபா சம்பளத்திற்கு வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறியதால், ஒவ்வொருவரும் அந்த நபருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவை செலுத்திவிட்டு, கடந்த 24ஆம் திகதி இரவு கப்பலில் ஏற்றியதாக தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களை குடிவரவு சட்டம் மற்றும் மனிதக் கடத்தல் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எவ்வாறாயினும், அவர்களுக்கு கொழும்பு துறைமுகம் மற்றும் கப்பலுக்குள் பிரவேசிக்க உதவியவர்களை கண்டறிய விசாரணைகள் இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

