உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 8,719 ஐ 4,714 ஆக குறைத்த ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 8,719 ஐ 4,714 ஆக குறைத்த ஆணைக்குழு

தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் புதிய அறிக்கையின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை 4714 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டது. குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவால் குறித்த அறிக்கை கையளிக்கப்பட்டிருந்தது.

தற்போதுள்ள உள்ளூராட்சி மன்றங்களிலுள்ள 8000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் எல்லை நிர்ணய குழு உருவாக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதி எல்லை நிர்ணய குழுவை அதற்கு பொறுப்பான அமைச்சர் பிரதமர் தினேஷ் குணவர்தன நியமித்திருந்தார்.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும் குறித்த குழு நியமனமானது, உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கில் நியமிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியிருந்தன.

நாட்டில் தற்போதுள்ள 29 மாநகர சபைகள், 36 நகரசபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என மொத்தமாக 344 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8719 உறுப்பினர்கள் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தற்போதைய உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய தேர்தலின் மூலம் 4714 உறுப்பினர்களே தெரிவு செய்யப்படவுள்ளனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )