
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசு ஒருபோதும் வாபஸ் பெறாது
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அரசு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுவிட்டதாக சிலர் தெரிவிக்கின்றனர்.புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அரசு வாபஸ் பெறவில்லை.வாபஸ் பெறவும் மாட்டாது எனத்தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, சட்டத்தின் பிரகாரம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத யாராக இருந்தாலும் அவர் பயங்கரவாதி என்றே கருதப்படுவார் என்றும் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பாக சிவில் அமைப்புகள் உட்பட பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். சிலர் விமர்சித்து வருகின்றனர். இந்த சட்டமூலத்துக்கு எதிராக போராட்டங்களையும் சிலர் முன்னெடுத்திருந்தனர். தற்போது நீதிமன்ற விடுமுறை காலம். இவ்வாறான நிலையில் சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்தால். அதனை எதிர்ப்பவர்களுக்கு நீதிமன்றம் செல்ல முடியாத நிலை ஏற்படும் . இதனை கருத்திற்கொண்டு சற்று தாமதித்து சட்டமூலம் பாராளுமனறத்தில் சமர்ப்பிக்கப்படும்
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதால் அரசு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெற்றுவிட்டதாக தெரிவிக்கின்றனர். அதில் எந்த உண்மையும் இல்லை. சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றம் செல்ல யாராவது விரும்பினால் , அவர்களுக்கு அந்த ஜனநாயக உரிமை இருக்கவேண்டும். அதனை கருத்திற்கொண்டே சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதை சற்று பிற்போட்டுள்ளோம். மாறாக அரசு போராட்டத்துக்கு அஞ்சி புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை வாபஸ் பெறவில்லை.வாபஸ் பெறவும் மாட்டாது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஜனநாயகத்துக்கு விராேதம் என தெரிவிப்பவர்கள் அதற்கு மாற்று வழி என்ன என்பதை தெரிவிக்கவேண்டும். தற்போது இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டம் கடினமானது. மனித உரிமையை மீறும் விடயங்கள் அதில் இருப்பதாக தெரிவித்தே, புதிய திருத்தம் மேற்கொள்ளுமாறு பலரும் தெரிவித்திருந்தனர். சர்வதேச அமைப்புகளும் தெரிவித்து வந்தன. அதன் பிரகாரமே தற்போது திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் ஒருவரை கைது செய்யவும் முடியும் அவரை தடுப்புக் காவலில் வைக்கவும் முடியும். அதேபோன்று அவசரகால சட்டத்தை பயன்படுத்தி யாரை வேண்டுமானாலும் கைது செய்யலாம். அவர்களை தடுத்துவைப்பதற்கு ஜனாதிபதி கைச்சாத்திடமுடியும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் அதில் திருத்தம் மேற்கொண்டு, ஜனாதிபதியின் அதிகாரம் இல்லாமலாக்கப்பட்டு. தடுத்துவைக்க கைச்சாத்திடும் அதிகாரம் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. பிரதிப் பாெலிஸ்மா அதிபருக்கு அந்த அதிகாரம் வழங்குவதன் மூலம் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய சட்டமூலத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என வரையறை செய்யப்படவில்லை என சிலர் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். சட்டத்தின் பிரகாரம் சட்டத்தை ஏற்றுக்கொள்ளாத் தயாராக இருந்தாலும் அவர் பயங்கரவாதி என்றே கருதப்படுவார் . சட்டத்தை மீறுகின்றவர்கள் பயங்கரவாதி என்ற பட்டியலுக்கு வரமாட்டார்கள் அதனால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களினதும் நாட்டினதும் நலன் கருதியே கொண்டுவரப்பட்டிருக்கிறது என்றார்.

