
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ரணிலும் சிக்குவாரா?; மார்ச் 1ல் தீர்ப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த வழங்கில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்பு விடுபாட்டு உரிமையைப் பெறுவாரா? இல்லையா? என்பது குறித்த முடிவு மார்ச் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது.
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே புலனாய்வுத் தகவல்கள் எச்சரித்த போதும் அது குறித்து அப்போதைய அரச தலைவர்கள் மற்றும் பாதுகாப்பு துறை சார்ந்தோர் அலட்சியமாகக் இருந்ததன் மூலம் குற்றமிழைத்துள்ளதாக அவர்களுக்கு எதிராக 108 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
குறிப்பாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஆலட்சியமாக இருந்ததன் மூலம் தாக்குதல் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் உயிர்த்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கோரி தாக்கல் செய்த 108 மனுக்கள் நேற்றுக் காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த வழக்கில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமைசிங்க சிறப்பு விடுபாட்டு உரிமையைப் பெறுவாரா? இல்லையா? என்பது குறித்த முடிவு மார்ச் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என நீதிபதி மகேஷ் டி சில்வா அறிவித்தார்.
எனினும் இலங்கை அரசியலமைப்பின் 35 வது பிரிவின்படி இந்த மனுக்களில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது. அவருக்கு சிறப்பு விடுபாட்டு உரிமை உள்ளது என ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் நீதிமன்றில் வாதிட்டார்.
இதனையடுத்தே இந்த விவகாரம் தொடர்பான உத்தரவு மார்ச் 01ஆம் திகதி வழங்கப்படும் என நீதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த மனுக்களில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தன சார்பில் தாம் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபர் நேற்று காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றில் அறிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நட்டஈட்டை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உள்ளிட்ட ஐவருக்கு இலங்கை உயர் நீதிமன்றம் கடந்த 12ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

