
உள்ளூராட்சி தேர்தலின் பின் பாராளுமன்றம் கலைப்பு; வருட நடுப்பகுதியில் பொதுத் தேர்தல்
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர், பாராளுமன்றத்தை கலைத்து இந்த வருட நடுப்பகுதியில் அரசாங்கத்தினால் பொதுத் தேர்தலுக்கு செல்ல நேரிடும் என்று முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
சுதந்திர மக்கள் சபையினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைகள் தேர்தலில் அரசாங்கம் படுதோல்வியடையும் என்பதனை அரசாங்கமே அறிந்துள்ளது. அவ்வாறு படுதோல்வியடைந்த பின்னர் இந்த பாராளுமன்றத்தை நடத்திச் செல்ல முடியுமா? வரவு செலவுத் திட்டம் 124 வாக்குகளால் நிறைவேறினாலும் மக்கள் ஆணைக்கும் தற்போதைய பாராளுமன்றத்திற்கும் இடையே தொடர்பில்லை.
இதனால் இந்த வருட நடுப்பகுதியில் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்ல வேண்டும். விரும்பாவிட்டாலும் தேர்தலுக்கு அரசாங்கம் செல்ல நேரிடும். மார்ச் இறுதிக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைக்கும். இதனால் உள்ளூராட்சி தேர்தலுக்கு பின்னர் பாராளுமன்றத்தை கலைத்து மக்களுக்கு புதிய பாராளுமன்றத்தை அமைக்க இடமளிக்க வேண்டும்.
இதனை செய்யாது நாட்டில் எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. வடக்கு, கிழக்கு பிரச்சினை, நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழு, அரசியலமைப்பு திருத்தம் ஆகியவற்றுக்கு மக்கள் ஆணையுள்ள அரசாங்கம் இருக்க வேண்டும். இதன்படி உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் 3, 4 மாதங்களில் நிச்சயமாக பாராளுமன்றத்தை கலைக்க நேரிடும் என்றார்.

