தடைக்கு இலங்கை கடும் ஆட்சேபனை; பயனற்றது என்கிறார் அலி சப்ரி

தடைக்கு இலங்கை கடும் ஆட்சேபனை; பயனற்றது என்கிறார் அலி சப்ரி

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்பில் இராஜதந்திர ஆட்சேபனையை தெரிவிப்பதற்காக கனேடிய உயர்ஸ்தானிகர், வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டார்.

நேற்று காலை இந்த அழைப்பு விடுக்கப்பட்டு ஆட்சேபனையை தெரிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கனேடிய குடிவரவு மற்றும் ஏதிலிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ, இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாரச்சி ஆகியோருக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, இவர்கள் கனடாவுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாகவே இராஜதந்திர ஆட்சேபனையை வெளியிடுவதற்காக, கனடா உயர்ஸ்தானிகர் வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்போது, நிலுவையில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து நல்லிணக்கத்தை அடையும் பொருட்டு, ஆழமாக வேரூன்றிய பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கை ஈடுபட்டுள்ள இந்த முக்கியமான தருணத்தில் இந்த தடைகள் பொறுப்பற்ற செயலாகும்.

கனடாவின் இந்த நடவடிக்கையானது தற்போதைய சந்தர்ப்பத்தில் உதவியற்றதும் , இலங்கையிலுள்ள சமூகத்தினரை ஓரங்கட்டுவதைப் போன்ற செயற்பாடுமாகும் என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )