
700 சிங்களவர்கள் காணாமல்போன வழக்கில் சந்தேக நபராக கோட்டா!
1989 ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஒரு சந்தேக நபராக அரசாங்க விசாரணையின் இரகசிய பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளதாக புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த தகவலை தென்னாபிரிக்காவின் சட்டத்தரணி யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இந்தக் காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மத்திய மாகாணத்தில் மாத்தளை மாவட்டத்தில், அதிகம் அறியப்படாத மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.
அப்போது குறைந்தது 700 பேர் – முக்கியமாக சிங்களவர்கள் அவரது கட்டளையின் கீழ் பாதுகாப்புப் படையினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது, ஜே.வி.பி என்ற மக்கள் விடுதலை முன்னணி சம்பந்தப்பட்ட இரண்டாவது வன்முறைக் காலகட்டமாகும் என்றும் யஸ்மின் சூக்காவின் சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட இணையத்தளம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. வேண்டுகோள்
இதேவேளை 1989ம் ஆண்டு ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது அரச படை அதிகாரிகளால் இழைக்கப்பட்ட வன்முறைகளிற்கு பொறுப்பு கூறவேண்டும் என ஐ.நா. வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் நான்கு அமைப்புகள் இது தொடர்பான கூட்டு வேண்டுகோள் ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளன.
1989 ம் ஆண்டு ஜே.வி.பி.யின் கிளர்ச்சியின் போது மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற பலவந்தமாக காணாமல்போகச் செய்தல்,தன்னிச்சையாக தடுத்துவைத்தல்,சித்திரவதை,நீதிக்கு புறம்பான படுகொலைகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா. அமைப்புகள் மாத்தளை மாவட்டத்திற்கு பொறுப்பான அரச அதிகாரிகள் பொறுப்புக் கூறலிற்கு உட்படுத்தப்படாமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளன.
இழைக்கப்பட்ட குற்றங்களின் முக்கிய குற்றவாளிகளை (அரச அதிகாரிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள்) பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கு நீதித்துறை நடவடிக்கைகளை எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து ஐ.நா. வின் இந்த நான்கு அமைப்புகளின் அறிக்கை கவலை வெளியிட்டுள்ளது.

