
யானை -மொட்டு கூட்டணி உறுதி; இரு கட்சி சின்னங்களிலும் போட்டி
உள்ளூராட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் கூட்டணியாக போட்டியிட இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதன்படி சில மாவட்டங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்திலும் சில மாவட்டங்களில் பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னதிலும் மேலும் சில இடங்களில் வேறு பொது சின்னத்திலும் போட்டியிட இரண்டு கட்சிகளும் தீர்மானித்துள்ளன.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இரண்டு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் வஜிர அபேவர்தன, பாலித ரங்கேபண்டார, ருவான் விஜேவர்தன ஆகியோரும் பொதுஜன பெரமுன சார்பில் மகிந்தானந்த அழுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன மற்றும் சஞ்சீவ எதிரிமான ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது கொழும்பு, கண்டி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இரண்டு கட்சிகளும் கூட்டணியாக போட்டியிட இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மற்றைய மாவட்டங்கள் தொடர்பில் மீண்டும் கூடி இணக்கம் காணப்படவுள்ளது.
இந்த மாவட்டங்களில் இரண்டு கட்சிகளின் மாவட்ட தலைவர்கள் அமைப்பாளர்கள், மற்றும் பிரதேச பிரதானிகளை அழைத்து எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்றும், இரண்டு தரப்பு வேட்பாளர்கள் தொடர்பிலும் எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எடுக்க இந்த கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

