
தேர்தலை பிற்போட வேண்டுமானால்; மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் தேர்தலை பிற்போடும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை பிற்போடும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாதுஎன்பதனால் தேர்தலை பிற்போட வேண்டுமானால் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் .ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதை தவிர அரசுக்கு வேறு வழி கிடையாதென முன்னாள் அமைச்சரும் பொதுஜன பெரமுனவின் சுயாதீன எதிரணி எம்.பி.யுமான பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.
நாவலவில் உள்ள சுதந்திர மக்கள் சபை அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை இவ்வாரம் உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.எனினும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் உரிய காலத்தில் நடக்குமா அல்லது அரசியல் சூழ்ச்சிகளினால் தேர்தல் பிற்போடப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் பலமாக உள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழு வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் தினம் தொடர்பில் இந்த வாரத்தில் அறிவிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும் சட்டத்திற்கமைய மார்ச் 30 ஆம் திகதிக்கு முன்னர் நாடு முழுவதும் 340 உள்ளூராட்சி சபைகளின் காலம் முடிவடைகின்றது. இதன்படி பெப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் ஆரம்பத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.
இதேவேளை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பொன்று உள்ளது. இதன்படி உள்ளூராட்சி சபைகளின் தேர்தலை ஒத்தி வைப்பதென்றால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும். இதனை தவிர பாராளுமன்றத்தில் யோசனையை நிறைவேற்றி தேர்தலை ஒத்தி வைக்க முடியாது. இதனால் கட்டாயமாக குறிப்பிட்ட தினத்தில் தேர்தலை நடத்த வேண்டும்.
அரசியலமைப்பின் படி தேர்தலை நடத்த உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்,தேர்தலை பிற்போட வேண்டுமானால் அரசு அதற்கான நடவடிக்கையை பாராளுமன்ற மட்டத்தில் முன்னெடுக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.ஆனால் தேர்தலை பிற்போடும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு கிடையாது.
தவிர்க்க முடியாத காரணத்தை தவிர தேர்தலை பிற்போடும் உரிமை அரசுக்கு இல்லை.
ஏற்கனவே ஒரு வருடம் பிற்போட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலை மீண்டும் பிற்போடுவதற்கான தேவை எதுவும் கிடையாது,தேர்தலை பிற்போட வேண்டுமானால் அதற்கு மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது.தேர்தலை பிற்போட நாட்டு மக்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கமாட்டார்கள்.தேர்தல் ஒன்றையே மக்கள் கோரியுள்ளனர் என்றார்.

