வட,கிழக்கில் சுனாமி பலியெடுத்த உறவுகளுக்கு கண்ணீர் காணிக்கை

வட,கிழக்கில் சுனாமி பலியெடுத்த உறவுகளுக்கு கண்ணீர் காணிக்கை

சுனாமியால் காவு கொள்ளப்பட்ட மக்களின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நேற்று உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
சுனாமி கோரத் தாண்டிவம் ஆடி உயிர்களைக் காவுகொண்ட இடங்கள், சுனாமி நினைவாலயங்கள், பொது இடங்களில் உறவுகள், மக்கள், மத குருமார்கள், அரசியல் வாதிகள் உள்ளிட்டவர்கள் கூடி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு

மூவாயிரத்திற்கும் அதிகமான மக்களை காவுகொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் பல இடங்களில் நினைவு நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.பிரதான நிகழ்வு முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் ஆகிய மும் மத வழிபாடுளுடன் இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலும் சுனாமியால் உயிரிழந்த உறவுகளை நினைந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றதுமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையால் உயிரிழந்த ஒரு தொகுதி உறவுகளின் உடல்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள சுனாமி நினைவாலய வளாகத்தில் காலை நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது சுனாமியால் கள்ளப்பாட்டைச் சேர்ந்த பெருமளவான மக்கள் உயிரிழந்தனர். அவ்வாறு உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் கள்ளப்படு தெற்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
.
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் அதிகமான மக்கள் சுனாமிக்கு இரையான வடமரட்சி கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய ஏற்பாட்டில் காலை வடமராட்சி உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் தமது உறவுகளை அஞ்சலித்தனர். .வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சுனாமி நினைவேந்தல் கண்ணீர் மல்க அனுஷ்டிக்கப்பட்டது. முன்னாள் மாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் சுடரினை ஏற்றி அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்துவைத்தார்.குறித்த நினைவேந்தலில் ஆலய பங்குத்தந்தை, மருதங்கேணி பொலிஸ் அதிகாரி, இராணு அதிகாரி, அரசியல் பிரமுகர்கள், உயிரிழந்தவர்களது உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.சுனாமியால் உயிர்நீத்த உறவுகளுக்கான 18ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கு முன்றலில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உயிரிழந்தவர்கள் நினைவாக நினைவு சுடர்கள் ஏற்றப்பட்டு, இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது.

மன்னார்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. மன்னார் மாவட்டச் செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்த சுனாமி நினைவேந்தல் நிகழ்வு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.
வவுனியா
வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் மற்றும் வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் சு அஞ்சலி நிகழ்வு வவுனியா பூந்தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவக தூபியில் இடம்பெற்றது.இதன்போது உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவுபேருரைகளும் இடம்பெற்றன .
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திலும் உணர்வுபூர்வமாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டது.சுமார் 1800 பேர் பலியான திருச்செந்தூர், நாவலடி, டச்பார் போன்ற கரையோர பிரதேசங்களில் உள்ள சுனாமி நினைவுத்தூபிகளில் இறந்தவர்களின் புகைப்படங்களை வைத்து, அவர்களது உறவினர்கள் கதறியழுது மலரஞ்சலி செலுத்தினர். உயிர் நீத்த உறவுகளின் 18ஆவது நினைவஞ்சலியும், ஆத்ம சாந்தி வேண்டிய பிரார்த்தனை நிகழ்வுகளும் பாசிக்குடா கடற்கரையில் நடைபெற்றது.கிண்ணியா பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுனாமி நினைவுதினமானது கிண்ணியா கடற்கரையில் உள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி தலைமையில் இடம்பெற்றது. இதேவேளை கிண்ணியா உப்பாறு கடலூர் கோவிலிலும் சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கான விசேட பூஜை வழிபாடும், கடல் மாதாவுக்கு கடலில் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் இடம்பெற்றது.
கல்முனை – மாளிகைக்காடு
சுனாமிப்பேரலையில் 58 மாணவர்களை இழந்த கல்முனை கல்வி வலய மாளிகைக்காடு கமு/கமு/ அல்- ஹுசைன் வித்தியாலயத்தின் சுனாமி நினைவு தின நிகழ்வும், துஆ பிராத்தனையும் பாடசலை அதிபர் ஏ.எல்.எம்.ஏ. நழீர் தலைமையில் பாடசலையில் இடம்பெற்றது.சாய்ந்தமருது வொலிவேரியன் ஹிஜ்ரா மஸ்ஜிதில் மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன சுனாமியால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேற்றப்பட்டுள்ள சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் ஹிஜ்ரா மஸ்ஜிதில் கத்தமுல் குர்ஆன் தமாம் நிகழ்வும் விஷேட துஆ பிராத்தனையும் பள்ளிவாசலின் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.எம்.முஸ்தபா தலைமையில் இடம்பெற்றது.

சுனாமி பேபி” அபிலாஷும்
உயிரிழந்தோருக்கு அஞ்சலி

சுனாமி பேபி என்ற அழைக்கப்படுகின்ற அபிலாஷ் தனது இல்லத்தில் வைத்துள்ள சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தூபியில் அஞ்சலி செலுத்தினார்.சுனாமி தாக்கத்தினால் கிழக்கு மாகாணமே மிகவும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2004.12.26 அன்று சுனாமியால் காணாமல்போய் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்ட அபிலாஷ் என்ற ஆண் குழந்தை ஒன்றுக்கு அப்போது 9 தாய்மார்கள் உரிமை கொண்டாடியிருந்தனர்.பல்வேறு போராட்டங்களின் மத்தியில் இரண்டு தாய்மார்கள் உரிமை கோர குழந்தை மரபணு பரிசோதனை மூலம் ஜெயராசா தம்பதியினரது என உறுதிப்படுத்தப்பட்டு பின்னர் அக்குழந்தை அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அபிலாஷ் அப்போதிருந்து சுனாமி பேபி என்றே அழைக்கப்பட்டுவரும் நிலையில் நேற்று தனது 18ஆவது வயதில் சுனாமி நினைவு தினத்தில் உயிர்நீர்த்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )