தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றாகப் போட்டி   பங்காளிகளுடன் பேசி  இறுதி முடிவு ; சம்பந்தன் அறிவிப்பு-தமிழ் தேசியக்கட்சிகளின் முயற்சிக்கும்  வரவேற்பு

தமிழ் தேசியக்கட்சிகள் ஒன்றாகப் போட்டி   பங்காளிகளுடன் பேசி  இறுதி முடிவு ; சம்பந்தன் அறிவிப்பு-தமிழ் தேசியக்கட்சிகளின் முயற்சிக்கும்  வரவேற்பு

உள்ளுராட்சி சபைத்தேர்தல் ,ஜனாதிபதியுடனான சந்திப்புக்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடிகலந்துரையாடியமை  வரவேற்கத்தக்கது.  மகிழ்ச்சி தரக்கூடியது.வரப்போகும்  உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஒன்றாகக் களமிறங்குவது தொடர்பில் நாம் அனைவருடனும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்போம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான  நீதியரசர்  சி.வி.விக்னேஸ்வரனின் நல்லூரில் உள்ள இல்லத்தில் கடந்த சனிக்கிழமை தமிழ்த் தேசியக் கட்சிகளான  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் ஒன்று கூடி உள்ளுராட்சி சபைத்தேர்தல் ,ஜனாதிபதியுடனான சந்திப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடல்  நடத்தியிருந்தனர். இது தொடர்பிலேயே   இவ்வாறு தனது  நிலைப்பாட்டை தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் கூறுகையில்,

 தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி அரசியல் தீர்வு, ஜனாதிபதியுடனான சந்திப்புக்கள் , உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடியதாக அறிந்தேன். இன்னும் பல விடயங்களை அவர்கள் கதைத்திருக்கக் கூடும்.

அரசியல் தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒரு நிலைப்பாட்டிலேயே உள்ளன. அதேவேளை ஜனாதிபதியுடனான பேச்சும் தமிழர் அபிலாஷைகளை வெல்லக் கூடியதாக இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ்த் தேசியக் கட்சிகளின் நிலைப்பாடு.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகப் போட்டியிடுவது அதிக நன்மை என்ற விடயமும் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது பேச்சளவில் உள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சித்தலைவர்கள் இது தொடர்பில் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்பார்கள். ஏனைய தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடி இறுதி முடிவு எடுப்போம். இதனை விட மேலதிகமான கருத்துக்களை  கூறி இந்த முயற்சியை நான் குழப்ப விரும்பவில்லை என்றார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )