மீண்டும் கொரோனா இலங்கை ஆபத்தில் ?

மீண்டும் கொரோனா இலங்கை ஆபத்தில் ?

சீனாவில் கொவிட் தொற்று மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையும் ஆபத்தில் இருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் அனைவரும் உரிய சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவது அவசியமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொவிட் பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் சீனா கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கொவிட் கட்டுப்பாட்டில் கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டாலும், சீனா பின்னர் அந்த நிபந்தனைகளை தளர்த்தியமையால் கொவிட் பரவல் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது.

சீனாவில் கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு இலங்கையையும் பாதிக்குமா? என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

உலகில் எந்தவொரு நாட்டிலாவது கொவிட் அச்சுறுத்தல் காணப்படுமாயின் இலங்கையும் ஆபத்தில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் வலியுறுத்தினார். எனவே, அனைவரும் வழமையான சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது இன்றியமையாதது எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் தற்போது கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இதனால் அனைவரும் தமது சுகாதாரத்தை பேணுவது அவசியமாகும். விசேடமாக சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி செயற்படுவது அவசியமாகுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் மற்றும் கப்பல்கள் மூலம் இலங்கை வருபவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சில கொவிட் கட்டுப்பாட்டு விதிமுறைகள் டிசம்பர் 7 ஆம் திகதி முதல் தளர்த்தப்பட்டுள்ளன.

இதற்கமைய, வெளிநாட்டில் இருந்து இலங்கை வரும் பயணிகள் தமக்கு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக கட்டாயமாக பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் தடுப்பூசி பெற்றுக்கொண்டமைக்கான சான்றிதழ் சமர்ப்பித்தல் போன்ற கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )