
சம்பந்தன், சுமந்திரன் தனியாக ஜனாதிபதியை சந்தித்தது ஏன்?
அரசுக்கும் – தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையே இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வரும் நிலையில் திடீரென தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா. சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தனியாக ஜனாதிபதியைச் சந்தித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்தத் திடீர் சந்திப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் சீ.வி. விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கொழும்பில் இல்லாத சமயம் நேற்று முன்தினம் இந்தத் திடீர் சந்திப்பு இடம்பெற்றது. இச்சந்திப்பை சுமந்திரன் இந்தச் சந்திப்பை ஒழுங்கு செய்திருந்ததாக குற்றாச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
ஜனாாதிபதி அழைத்துள்ள கூட்டத்தில் பங்கேற்க முடியுமா? என சுமந்திரன் கூட்டத்துக்கு சிறிய அவகாசமே உள்ள நிலையில் என்னிடம் கேட்டார். நான் யாழ்ப்பாணத்தில் இருக்கிறேன் . போதிய முன்னறிவித்தல் இல்லாததால் இந்தத் சந்திப்பில் பங்கேற்க முடியாது என நான் தெரிவித்தேன் என சி.வி. விக்னேஷ்வரன் தினக்குரலுக்குத் தெரிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி செயலகத்தில் இருந்து எங்களுக்கு அழைப்பு வரவில்லை எனவும் கூறினேன். அத்துடன், ஏனைய கட்சித் தலைவர்களும் தங்களுக்கும் அழைப்பு வரவில்லை என தெரிவித்தனர்.
ஆனால் ஜனாதிபதி அனைவரையும் அழைக்குமாறு என்னிடம் கூறினார் என சுமந்திரன் தெரிலித்தார் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்தச் சந்திப்பை பிறிதொரு நாளுக்கு ஒத்திவைக்கக்கோரி தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ மற்றும் புளொட் சார்பில் ஜனாதிபதிக்கு உடனடியாகவே நான் கடிதம் அனுப்பினேன். எனினும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தான் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்துக்கு ஜனாதிபதி செயலகம் உடனடியாகவே பதில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அதில் இந்த சந்திப்பு உத்தியோகப்பூர்வமானது இல்லை. எதிர்வரும் 5 ஆம் திகதி அடுத்த சந்திப்புக்கான ஒழுங்கு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளதாக, சி. வி. விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

