முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பெப்.4 ற்கு முன்னர் இணக்கம் காணமுடியும்

முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் பெப்.4 ற்கு முன்னர் இணக்கம் காணமுடியும்

ஜனாதிபதியுடன் நடைபெறும் தமிழ் கட்சிகளின் பேச்சுவார்த்தையின் ஊடாக பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும் புதிய அரசியலமைப்பின் மூலம் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் காணமுடியுமென நம்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.யும் ஊடகப் பேச்சாளருமான ஏம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் அரசியல் கட்சி தலைவர்களுக்குமிடையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் பெப்ரவரி 4 ஆம் திகதிக்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணையாது வி ட்டால் நல்லிணக்கம் சாத்தியமில்லையென ஜனாதிபதி கூறியுள்ளார். இது குறித்து உங்கள் நிலைப்பாடு என்னவென வினவியபோதே இவ்வாறு தெரிவித்த சுமந்திரன் எம்.பி. மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பை ஏற்று நல்லிணக்கத்துக்கான அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ் தேசிய கட்சிகள் கலந்துகொண்டது நம்பிக்கையின் அடிப்படையில் என்பதற்கு அப்பால் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற நோக்கத்திலேயே.அந்த அடிப்படையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நாங்கள் (தமிழ் தேசிய கட்சி தலைவர்கள்)முன்வைத்த கோரிக்கைகளுக்கு எந்த தரப்பும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பதுடன் ஜனாதிபதியும் எங்களுடைய கோரிக்கைகளை ஏற்றிருக்கிறார்.அதில் தமிழ் பிரதேசங்களில் அபகரிக்கப்படும் காணிகள் தொடர்பில் உடனடியாக தீர்வை வழங்க ஜனாதிபதி உறுதியளித்திருப்பதுடன்,தங்களுக்கு (அரசாங்கத்துக்கு)காணி தேவையென்றால் தமிழ் தலைவர்களுடன் பேசி முடிவெடுப்பதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

அதேபோல்,புதிய அரசியலமைப்பு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஜனவரி மாதத்தில் வெவ்வேறு தினங்களில் பேசுவதற்கு நாள் ஒதுக்குவதாக ஜனாதிபதி அறிவித்திருக்கிறார்.அந்த சந்திப்பு என்பது முதலில் இருந்து பேசுவதற்கான சந்திப்பாக இல்லாமல்,ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும் வரைவுகளை வைத்துக்கொண்டு எவ்வாறு அரசியலமைப்பை அமுல்படுத்துவது மற்றும் அதிகாரப்பகிர்வு எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் மாத்திரம் பேசும் ஒரு சந்திப்பாக அந்த சந்திப்பு அமையவேண்டுமெனவும் கோரிக்கை வைத்திருக்கிறோம்.அதனையும் ஜனாதிபதி உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள்.

இந்த சந்திப்பில் நாங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் என்பது புதிய விடயங்கள் அல்ல.நீண்டகாலமாக நாங்கள் இந்த கோரிக்கைகளையே முன்வைத்து பேசி வந்திருக்கிறோம்.இவை தொடர்பான வரைவுகள் கூட ஏற்கனேவே தயாரிக்கப்பட்டிருக்கின்றன.எனவே இனியும் இந்த விடயங்கள் தொடர்பில் பேசிக்கொண்டிருக்கவேண்டிய தேவையில்லை.அவற்றை அமுல்படுத்துவதே இறுதி வடிவமாக இருக்கின்றன.ஆகவே அவற்றை அமுல்படுத்துவது தொடர்பில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு ஒரு மாதம் தேவையில்லை.ஒரு நாளிலேயே முடிவை எடுத்துக்கொள்ளலாம் என்பதையும் நாங்கள் இந்த கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தோம். இதனை எதிர்க்கட்சி தலைவர் உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்.

ஆகவே இந்த சந்திப்பில் நாங்கள் முன்வைத்திருக்கும் கோரிக்கைகள் நடைபெறுமா?நடைபெறாதா?என்பதற்கு அப்பால் எங்களுக்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம்.அதற்கு ஜனாதிபதி ஒரு குறுகிய காலத்தையே காலக்கெடுவாகவும் வைத்திருக்கிறார்.ஆகவே நாங்கள் ஒரு நீண்ட கலந்துரையாடலில் ஈடுபடவேண்டுமென்பதோ அல்லது காலத்தை கடத்தவேண்டுமென்பதோ இந்த விடயத்தில் சாத்தியப்படப்போவதில்லை.

ஜனாதிபதி மேற்படி அழைப்பை விடுத்திருந்தபோது,மக்கள் ஆணையில்லாத ஒரு அரசாங்கத்துடன்,மக்கள் ஆணையில்லாத ஒரு ஜனாதிபதியுடன் பேசுவதில் எந்த பிரயோசனமும் இருக்கப்போவதில்லை என்று தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் சில கட்சிகளின் தலைவர்கள் கூறியிருந்தார்கள்.ஆனால்,இந்த விடயத்தில் மாற்றுக்கருத்து ஒன்றும் இருக்கிறது.மக்களின் ஆணையுள்ள ஒரு அரசாங்கம் இருக்கும்பட்சத்தில் நாங்கள் முன்வைத்த கோரிக்கைகள் கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன.மக்கள் ஆணையுள்ள அரசாங்கம் ஒன்று இருந்தால் நாங்கள் தற்பொழுது முன்வைத்துள்ள கோரிக்கைகளை புறக்கணித்து,மக்கள் தங்களுக்கு இதற்காக ஆணை வழங்கவில்லை என்று தட்டிக்கழிக்க வாய்ப்பிருக்கிறது.ஆகவே பலவீனமான ஒரு அரசாங்கம் இருக்கும் பட்சத்தில் எங்களுடைய கோரிக்கைகளை செய்யக்கூடியதாக கூட இருக்கலாம்.அந்த சந்தர்ப்பத்தையே நாங்கள் தற்பொழுது பயன்படுத்தியிருக்கிறோம்.

ஜனாதிபதியுடன் நடைபெறும் தமிழ் கட்சிகளின் பேச்சுவார்த்தையின் ஊடாக பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையான தீர்வு கிடைக்காவிட்டாலும் புதிய அரசியலமைப்பின் மூலம் அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கம் காணமுடியுமென நம்புகின்றோம் என்றார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )