பெப்ரவரி 4 -க்குள் தீர்வின்றேல் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை

பெப்ரவரி 4 -க்குள் தீர்வின்றேல் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை

*வெளிப்படையாக அறிவிப்பேன் என்கிறார் ஜனாதிபதி;

*உடனடி பிரச்சினைகளை தீர்க்க குழுக்களை அமைக்கிறார்

*புதிய அரசியலமைப்பு, அதிகாரப் பகிர்வு குறித்து ஜனவரியில் மீண்டும் பேச முடிவு

இனப்பிரச்சினை உள்ளிட்ட நாட்டில் புரையோடிப் போயுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு பெப்ரவரி 04 இலங்கையின் 75 ஆவது சுதந்திரன தினத்துக்கு முன்னர் தீர்வு காணப்பட வேண்டும். அது சாத்தியம் இல்லையேல் நாட்டில் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதை நான் வெளிப்படையாக அறிவிப்பேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற நல்லிணக்கத்துக்கான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தக் கருத்தை வெளியிட்டதாக தமிழ்க் கூட்டமைப்பின் பேச்சாளர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ் சுமந்திரன் கூறினார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் தமிழ் மக்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கூட்டாக வலியுறுத்தினோம்.

இதில் உடனடிப் பிரச்சினைகளான காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் நிறைவேற்றுத் துறைக்கு பொறுப்பை ஒப்படைப்பதாகவும். இவை தொடர்பில் புதிய குழுக்களை அமைத்தோ அல்லது ஏற்கனவே உள்ள குழுக்கள் மூலமாகவோ துரித தீர்வு காண முயற்சிக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாகவும் சுமந்திரன் கூறினார்.

ஏற்கனவே உள்ள சட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பில் மீண்டும் ஜனவரி மாதத்தில் தமிழ்க் கட்சிகளுடன் பேசுவதாகவும் அவர் கூறினார்.

இதன்போது மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்தவும் நாங்கள் வலியுறுத்தினோம். அது குறித்து கவனம் செலுத்தப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன், புதிய அரசியலமைப்பு, அதிகாரப் பரவலாக்கம் குறித்து ஏற்கனவே பல வரைபுகள் உள்ளன. எனவே புதிதாக எதுவும் தேவையில்லை. அதன் அடிப்படையில் எவ்வாறு முன்னோக்கிச் செல்வது என்பது தொடர்பில் ஜனவரியில் மீண்டும் கூடிப் பேச முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பிரச்சினைகளுக்கு பெப்ரவரி 04 இலங்கையின் 75 ஆவது சுதந்திரன தினத்துக்கு முன்னர் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது அபிப்பிராயம். அது சாத்தியம் இல்லையேல் நாட்டில் நல்லிணக்கம் சாத்தியம் இல்லை என்பதை நான் வெளிப்படையாக அறிவிப்பேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறினார் எனவும் சுமந்திரன் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )