யாழ்.- சென்னை விமான சேவை மீண்டும் ஆரம்பம்

யாழ்.- சென்னை விமான சேவை மீண்டும் ஆரம்பம்

இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நேற்று திங்கட்கிழமை மீளத் திறக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020 ஆம் ஆண்டு மூடப்பட்ட நிலையில், இந்த விமான நிலையம் மீளவும் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை 10.30 அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் 11.20 அளவில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

அலையன்ஸ் எயார்லைன்ஸ் என்ற விமான சேவை நிறுவனத்தின் விமானத்தில் வந்த விருந்தினர்கள் மற்றும் பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்.மாவட்ட செயலாளர் க.மகேசன் சுற்றுலா துறை பிரதிநிதிகள், விமான நிலைய மற்றும் விமான சேவைகள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த விமான நிலையம் ஆரம்ப காலத்தில் பலாலி விமான நிலையம் என்ற பெயரில் 1947 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு பன்னாடுகளுக்கு சேவையை இந்த விமான நிலையம் முன்னெடுத்திருந்தது.

எனினும் உள்நாட்டு யுத்த சூழ்நிலை காரணமாக பயணிகள் சேவை நிறுத்தப்பட்டு, போர் விமானங்களின் பாவனைக்கு பயன்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து கடந்த ரணில் மைத்திரி தலைமையிலான அரசாங்க காலத்தில் தேர்தல் நெருக்கிய 2019 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது.

எனினும் சென்னை மற்றும் மும்பை ஆகிய பகுதிகளுக்கே விமான சேவைகள் இடம்பெற்றிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக ஒரு வருட இயக்கத்தின் பின்னர் மீண்டும் மூடப்படும் சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீண்டும் நேற்று யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது.

இவ் விமான சேவையின் மூலம் பயணிகள் குறைந்த நேரத்தில் பயணிக்க முடியும் என்பதுடன், கொழும்பிலிருந்து யாழப்பாணத்திற்கு வருவதற்கான மேலதிக போக்குவரத்து செலவும் மீதமாகின்றது.

யாழ்.சர்வதேச விமான நிலையம் திறப்பட்டுள்ளதன் மூலம் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு அதிகளவு வருவாய் கிடைக்கும். அத்துடன், வடபகுதி மற்றும் விமான நிலையத்தினை சூழ உள்ள மக்களின் வாழ்வாதாரம், மற்றும் அபிவிருத்தியடையும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

நேற்றைய ஆரம்ப சேவையில் 5 பயணிகளும் 9 அதிகாரிகளும் சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்தனர். மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானத்தில் இலங்கையிலிருந்து முற்பதிவு செய்த 11 பயணிகள் சென்றனர்.

வாரமொன்றுக்கு இந்த விமான சேவை நிறுவனத்தினால் நான்கு தினங்களுக்கு சேவைகள் நடத்தப்படுமெனவும், பயணியொருவர் 20 கிலோ வரை பொருட்களை விமானத்தில் எடுத்துச்செல்லமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 6700 இந்திய ரூபாவும் (சுமார்33,500இலங்கை ரூபா) யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு 9,200 இந்திய ரூபாவும் (சுமார்46,000இலங்கை ரூபா)கட்டணமாக அறவிடப்படுகின்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )