
தேசியப் பட்டியல் எம்.பி.யாக கோத்தா?
முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவை தேசியப்பட்டியல் எம்.பி.யாக பாராளுமன்றத்திற்குள் அழைத்து வர பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு குழுவினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோத்தபாய ராஜபக்ச அரசுக்கு எதிராக வெடித்த மக்கள் புரட்சியையடுத்து பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்சவும் நிதி அமைச்சர் பதவியிலிருந்து பசில் ராஜபக்சவும் ஜனாதிபதி பதவியிலிருந்து கோத்தபாய ராஜபக்சவும் விலகியிருந்தனர்.
இந்நிலையில் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகிய கோத்தபாய ராஜபக்ஸ வெளிநாடு சென்று தங்கியிருந்த நிலையில் பின்னர் நாடு திரும்பியுள்ளார். அதேபோன்றே அமெரிக்கா சென்ற பசில் ராஜபக்ஸவும் நாடு திரும்பியுள்ள நிலையிலேயே மீண்டும் ராஜபக்ஸக்களின் ஆதிக்கத்தை கொண்டு வர பொதுஜன பெரமுன கட்சிக்குள் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக விரைவில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் தனது ஆதரரவாளர்களான சர்ச்சசைக்குரிய முன்னாள் அமைச்சர்கள் சிலரை இணைத்துக்கொள்ள வேண்டுமென பசில் ராஜபக்ஸ விடாப்பிடியாகவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவை தேசியப்பட்டியல் எம்.பி.யாக பாராளுமன்றம் அழைத்துவர பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு குழு தீவிரமாக செயற்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. கோத்தபாய ராஜபக்ஸவிற்கு தேசியப்பட்டியலில் இடம் வழங்க பொதுஜன பெரமுனவில் தேசியப்பட்டியல் எம்.பி.க்களாகத் தற்போதுள்ள சிலர் தாம் பதவி விலகத் தயாராயிருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

